×

நீட் கட்ஆப் மதிப்பெண்கள் உயர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிப்பு: மருத்துவ கனவு சிதைந்துபோக வாய்ப்பு

 

சென்னை: தேசிய அளவில் நீட் தேர்வு தகுதி மதிப்பெண்கள் கடுமையாக உயர்ந்ததால் கிராமப்புற மாணவர்களின் மருத்துவ சேர்க்கை வாய்ப்புகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
மருத்துவப் படிப்புக்கான இளநிலை நீட் தேர்வு தகுதி கட்-ஆஃப் மதிப்பெண்கள் இதுவரை இல்லாத வகையில் இந்த ஆண்டு வரலாறு காணாத உயர்வைச் சந்தித்துள்ளன. இந்த திடீர் மதிப்பெண் உயர்வு காரணமாக, மருத்துவக் கனவோடு இருக்கும் கிராமப்புற மற்றும் அரசுப் பள்ளி மாணவர்கள் தங்களின் சேர்க்கை வாய்ப்புகளை இழந்து கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

இந்த ஆண்டு வெளியாகியுள்ள தகுதி மதிப்பெண் விவரங்கள் பிரிவுகள் வாரியாக பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, பொதுப்பிரிவு மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய உயர்சாதி ஏழைகளுக்கான கட்-ஆஃப் மதிப்பெண் இந்த ஆண்டு 213 ஆக உயர்ந்துள்ளது. நீட் தேர்வு எழுதிய இந்த பிரிவில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் கட்-ஆஃப் மதிப்பெண்களைப் பெற்றுத் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரத்தில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஒபிசி), பட்டியலினத்தவர் (எஸ்சி) மற்றும் பழங்குடியின (எஸ்டி) பிரிவு மாணவர்களுக்கான தகுதி கட்-ஆஃப் மதிப்பெண் கடந்த ஆண்டில் 113 ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு 177 ஆக அதிகரித்துள்ளது.

ஒரே ஆண்டில் இந்த பின்தங்கிய பிரிவு மாணவர்களுக்கான கட்-ஆஃப் மதிப்பெண் 64 வரை உயர்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த திடீர் உயர்வு, போதிய பயிற்சி வசதிகள் இல்லாத கிராமப்புற மாணவர்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். மேலும், இந்த ஆண்டு தேர்வு எழுதியவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை கணிசமாக அதிகரித்த போதிலும், கடுமையான கட்-ஆஃப் உயர்வால் தகுதி பெற்றவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 1.11 லட்சம் என்ற அளவில் குறைந்துள்ளது.

தமிழகத்தின் நிலவரத்தைப் பொறுத்தவரை, பல்வேறு குளறுபடிகளுக்கு மத்தியில் நீட் மறுதேர்வு எழுதத் தகுதியான மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. ஆனால், மறுதேர்வு எழுத விண்ணப்பித்தவர்களில் 23 சதவீதம் பேர் இந்தத் தேர்வை எழுத முன்வரவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இத்தகைய தேசிய அளவிலான கட்-ஆஃப் மதிப்பெண்களின் அசுர வளர்ச்சி காரணமாக, நடப்பு கல்வியாண்டில் தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான மாநில கட்-ஆஃப் மதிப்பெண்களும் கணிசமாக உயரக் கூடும். அதன்படி, தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடங்களைப் பெறுவதற்கான மாநில கட்-ஆஃப் மதிப்பெண் மேலும் 40 மதிப்பெண்கள் வரை உயரக் கூடும் என்று மருத்துவக் கல்வி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags : Chennai ,
× RELATED தயக்கத்தை விடுங்கள்; AI...