உணவகத்துடன் கூடிய ‘ரெஸ்டோ பார்’ மது விற்பனைக்கு அரசு திட்டம் சமூகக் கட்டமைப்பையே வேரறுக்கும் ஆபத்தான நகர்வு என்று எஸ்டிபிஐ கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஏ.கே.கரீம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், எளிய மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் மக்கள் மத்தியிலும், சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் நாளுக்கு நாள் வலுத்து வருகின்றன. ஆனால், இந்த மக்கள் கோரிக்கைகளுக்குச் செவிசாய்ப்பதற்குப் பதிலாக, தமிழக அரசு மது அருந்தும் பழக்கத்தை அடுத்த கட்ட நாகரிகப் பாய்ச்சலாக மாற்றத் துடிப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழகத்தில் உணவகங்களுடன் கூடிய மதுக்கூடங்களான ‘ரெஸ்டோ பார்’ கலாச்சாரத்தை டாஸ்மாக் நிர்வாகம் அறிமுகப்படுத்தப் பரிசீலித்து வருவதாக வெளியாகும் செய்திகள், தமிழகத்தின் சமூகக் கட்டமைப்பையே வேரறுக்கும் ஆபத்தான நகர்வாகும்.
‘பாதுகாப்பான சூழல்’, ‘நண்பர்களுடன் உரையாடும் வசதி’, ‘குடும்பத்தினருடன் அமர்ந்து சாப்பிடும் சொகுசு’ என கார்ப்பரேட் வார்த்தை ஜாலங்களோடு இந்த ரெஸ்டோ பார்கள் நியாயப்படுத்தப்படுகின்றன. உணவகத்தோடு மதுவை இணைப்பதன் மூலம், மது அருந்துவதை ஒரு சமூகக் குற்றமாகப் பார்க்காமல், அதை ஒரு வாழ்வியல் அங்கீகாரமாக மாற்ற அரசு துடிக்கிறது. ஏற்கனவே மது அரக்கனால் பல்லாயிரக்கணக்கான ஏழைக் குடும்பங்கள் தெருவுக்கு வந்துவிட்டன; பெண்களின் தாலிகள் பறிபோயுள்ளன; இளைஞர்களின் எதிர்காலம் நடுத்தெருவில் நிற்கிறது. இந்தச் சூழலில், சொகுசு கலாச்சாரம் என்ற பெயரில் கொண்டு வரப்படும் இந்த நடவடிக்கை, தமிழகத்தில் இன்னும் பேராபத்தான சமூகச் சீர்கேட்டையே உருவாக்கும்.
தமிழகத்தில் நாள்தோறும் அரங்கேறும் பல்வேறு கொடூர குற்றச்செயல்களுக்கு முதன்மை காரணியாகவும், ஊற்றுக்கண்ணாகவும் விளங்குவது மது உள்ளிட்ட போதைப்பொருட்கள் தான். போதையால் நாளுக்கு நாள் குற்றச் செயல்கள் அதிகரித்து வருகிறதே தவிர குறைந்தபாடில்லை. சட்டம் , ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய அரசே, குற்றச்செயல்களின் ஊற்றுக்கண்ணாக விளங்கும் மது போதையை ‘ரெஸ்டோ பார்’ என்ற பெயரில் மேலும் ஊக்குவிக்க முயல்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் இருக்கும் 700-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளை மூடுவதாக ஒருபுறம் அறிவித்துவிட்டு, மறுபுறம் இதுபோன்ற ‘ரெஸ்டோ பார்’ எனும் புதிய திட்டத்தைத் தீட்டுவது நேர் முரணாகும். ஒரு கையில் மதுக்கடைகளை மூடுவதாகச் சொல்லிவிட்டு, மறு கையில் நவீனக் கடைகளைத் திறப்பது என்ன நியாயம்?
எனவே, தமிழக மக்களின் எதிர்காலத்தைப் பாழாக்கும், குற்றச்செயல்களுக்கு வழிவகுக்கும் இந்த ‘ரெஸ்டோ பார்’ திட்ட யோசனையைத் தமிழக அரசு உடனடியாகக் குப்பைத் தொட்டியில் வீச வேண்டும். வருவாயைப் பெருக்குவதற்கு வேறு வழிகளைப் பார்க்க வேண்டுமே தவிர, மக்களைக் குடிகாரர்களாக்கிப் பார்க்கும் போக்கை கைவிட வேண்டும். அறிவித்தபடி டாஸ்மாக் கடைகளை முழுமையாக மூடி, பூரண மதுவிலக்கை நோக்கி அரசு உடனடியாக அடிவைக்க வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
