சென்னை: அண்டை மாநிலங்களைப் போல, உணவகத்துடன் இணைந்து செயல்படும் ‘ரெஸ்டோ பார்’ தேவையில்லை என்றும், அந்த திட்டம் கைவிடாவிட்டால் பாமக போராட்டம் நடத்தும் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைமுறையில் இருப்பதைப் போன்று தமிழ்நாட்டிலும் உணவங்களுடன் குடிப்பகங்களும் இணைக்கப்பட்ட ‘ரெஸ்டோ பார்’களை அமைக்க உரிமம் வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருவதாகவும், இது குறித்த அறிவிப்பு நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்படும் என்றும் ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
பெரும் கேட்டை விளைவிக்கும் திட்டம் குறித்த இந்த செய்திகள் உண்மையா? என்பதை அரசு விளக்க வேண்டும். தமிழ்நாட்டில் 3 நிலைகளில் மது குடிப்பகங்கள் அனுமதிக்கப்படுகின்றன. அரசு மதுக்கடைகளுடன் இணைந்த குடிப்பகங்கள் எச்எல்1 என்ற உரிமத்துடனும், மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரிலான குடிப்பகங்கள் எச்எல்2 என்ற உரிமத்துடனும், நட்சத்திர விடுதிகளில் உள்ள குடிப்பகங்கள் எச்எல்3 என்ற உரிமத்துடனும் இயங்கி வருகின்றன.
இவை அனைத்திலும் கடுமையான விதிமீறல்களும், சட்டவிரோத மது விற்பனையும் நடைபெற்று வருவதால் அவற்றை மூட வேண்டும் என்று பாமக, நலவாழ்வு ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் கூடுதலாக ரெஸ்டோ பார்களை அனுமதிக்கவும், அவற்றுக்காக எச்எல்3ஏ என்ற உரிமத்தை வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதும் பிற்போக்குத்தனமான செயல்களாகும் என்று அவர் கூறினார்.
