×

சுரண்டை அருகே பள்ளி, கல்லூரி மாணவர்களை குறி வைத்து காட்டுப்பகுதியில் கஞ்சா விற்ற 6 பேர் கைது

சுரண்டை, ஜூலை 17: சுரண்டை, சாம்பவர்வடகரை, சுந்தரபாண்டியபுரம் பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை நடைபெற்று வருகிறது. இதனால் சட்ட விரோத சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. ஆனால் போலீசார் கஞ்சா விற்பனையை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் போலீசார் சிலர் கஞ்சா விற்பனையாளர்களிடம் பணத்தை வாங்கி கொண்டு கஞ்சா விற்பனையை கண்டு கொள்வதில்லை என்று புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக மாவட்ட எஸ்பிக்கு புகார் சென்றதைதொடர்ந்து அவர் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில் நேற்று முன்தினம் சாம்பவர்வடகரை இன்ஸ்பெக்டர் காளீஸ்வரி, எஸ்ஐ கார்த்திக் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சுந்தரபாண்டியபுரம் காட்டுப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 6பேர் போலீசாரை கண்டதும் தப்பியோடினர். அவர்களை போலீசார், மடக்கி பிடித்து விசாரித்ததில் சுந்தரபாண்டியபுரத்தை சேர்ந்த இசக்கி மகன் பொன்பாண்டி (23), ஹரிஹரபாண்டியன் மகன் ராஜேஷ் (20), செல்வம் மகன் உதயகுமார் (19), தமிழ்செல்வன் மகன் சந்தோஷ் (20), மேலப்பாவூர் மாரியப்பன் மகன் சரவணன் (28), சடையப்பபுரம் திருமலைகுமார் மகன் பிரவீன் (21) என்பதும், அவர்கள் சுமார் அரை கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைதொடர்ந்து போலீசார் வழக்குப்பதிந்து 6 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags : Surandai ,Sampavaravadagarai ,Sundarapandiyapuram ,
× RELATED திமுக ஆட்சி சாதனைகள் விளக்கி...