×

கடைசி நிமிடங்களில் இங்கி. பேட்டரி டவுன் மெஸ்ஸி ‘உதவி’யால் பைனலில் அர்ஜென்டினா

அட்லான்டா: பிபா உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடரின் பரபரப்பான 2வது அரையிறுதியில், நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி 7வது முறையாக பைனலுக்கு முன்னேறியது. அட்லான்டா அரங்கில் நடந்த அரையிறுதியில் ஹாரி கேன் தலைமையிலான இங்கிலாந்து அணி தொடக்கத்தில் இருந்தே உத்வேகத்துடன் விளையாடி உலக சாம்பியனுக்கு நெருக்கடி கொடுத்தது. இரு அணிகளும் கொஞ்சமும் சளைக்காமல் ஈடுகொடுத்து விளையாடியதால் ஆட்டத்தில் அனல் பறந்தது.

இரு தரப்பிலும் மேற்கொள்ளப்பட்ட கோல் முயற்சிகளை தற்காப்பு வீரர்கள் விழிப்புடன் செயல்பட்டு முறியடித்துக்கொண்டே இருந்தனர். இதனால் இடைவேளை வரை கோல் ஏதும் விழாமல் இழுபறி நீடித்தது. இரண்டாவது பாதியில் வேகத்தைக் கூட்டிய இங்கிலாந்து அணிக்கு 55வது நிமிடத்தில் மார்கன் ரோஜர்ஸ் அபாரமாக கடத்திக் கொடுத்த பந்தை அந்தோனி கார்டன் மின்னல் வேகத்தில் கோலாக மாற்றி இங்கிலாந்து அணிக்கு 1-0 என முன்னிலை கொடுத்தார்.

இதைத் தொடர்ந்து பதில் கோல் அடிக்க அர்ஜென்டினா வீரர்கள் கடுமையாக முயற்சித்தும் பல வாய்ப்புகள் நூலிழையில் நழுவி அவர்களை விரக்தியில் ஆழ்த்தின. போதாக்குறைக்கு, மூன்று நான்கு இங்கிலாந்து வீரர்கள் மெஸ்ஸியை இப்படி அப்படி நகரவிடாமல் ஸ்கெட்ச் போட்டு முட்டுக்கட்டை வைத்துக் கொண்டே இருந்தனர். இன்னும் 5 நிமிடம் தாக்குப்பிடித்துவிட்டால் பைனலுக்குள் நுழைந்துவிடலாம் என இங்கிலாந்து தரப்பு மனப்பால் குடிக்க… மெஸ்ஸி தன் வேலையை காட்டினார்.

எதிரணி வீரர்களின் கண்களில் மண்ணைத் தூவி கோல் பகுதிக்கு முன்பாக அவர் கொடுத்த அற்புதமான பாஸை துள்ளிப் பாய்ந்து வந்த என்ஸோ மார்டினஸ் வலைக்குள் திணிக்க 1-1 என சமநிலை ஏற்பட்டது. ஏற்கனவே முதல் கோல் போட்டதும் பேட்டரி தீர்ந்துபோய் நடை போட்டுக்கொண்டிருந்த இங்கிலாந்து தரப்பு இந்த தாக்குதலால் நிலைகுலைந்து போனது. இதை மிகச்சரியாகப் பயன்படுத்திக் கொண்ட அர்ஜென்டினா வீரர்கள் அலை அலையாகத் தொடர்ந்து துல்லிய தாக்குதல் நடத்தியபடி இருந்தனர்.

இன்ஜுரி டைம் கடைசி விநாடிகளில் மெக் அலிஸ்டர் அடித்த அற்புதமான ஷாட் கோல் கம்பத்தில் பட்டுத் தெறித்து ஓட ஆட்டம் எக்ஸ்ட்ரா டைமுக்கு செல்லும் என்றே எல்லோரும் நினைத்தனர். ஆனால் மெஸ்ஸி விடுவதாக இல்லை. தன்னை சுற்றிச்சுற்றி வந்த இங்கிலாந்து தற்காப்பு வீரர்களுக்கு தண்ணி காட்டிய அவர் பந்தை கோல் பகுதி நோக்கி மேலாகப் பறக்கவிட… அதற்காகவே காத்திருந்த மாற்று வீரர் லதாரோ மார்டினஸ் (90’+2’) உயரே எழும்பி தலையால் முட்டி வலைக்குள் திணிக்க அர்ஜென்டினா 7வது முறையாக பைனலுக்குள் நுழைந்தது.

கடைசி ஏழு நிமிடங்களில் என்ன நடந்தது என்பதே புரியாமல் இங்கிலாந்து தரப்பு அதிர்ச்சியில் உறைந்து நிற்க, மெஸ்ஸி மற்றும் கோ ஆனந்தக் கண்ணீரில் நனைந்தது. சக வீரர்கள் கோல் அடிக்க ‘அசிஸ்ட்’ செய்த மெஸ்ஸி ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். ஞாயிறன்று நள்ளிரவு தொடங்கும் பரபரப்பான இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா கோப்பையை தக்கவைத்துக் கொள்வதற்காக ஸ்பெயின் அணியின் சவாலை சந்திக்க உள்ளது.

* நம்பிக்கை வீணாகவில்லை…
நடக்கும் விஷயங்களை நம்பவே முடியவில்லை. உலக கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்பே எங்கள் அணி மீது எனக்கு முழு நம்பிக்கை இருந்தது. நிச்சயமாக அரையிறுதிக்கு முன்னேறுவோம் என தெரியும். இதோ இறுதிப் போட்டிக்குள்ளும் நுழைந்துவிட்டோம். கோப்பையை தக்கவைக்க கடுமையாக முயற்சிப்போம். ஸ்பெயின் மிகச் சிறந்த வீரர்கள் அடங்கிய அற்புதமான அணி.

அவர்கள் அமர்க்களமாக விளையாடி வருகிறார்கள். அந்த அணி, அவர்களது ஆட்ட முறை, வியூகங்கள் எல்லாமே எனக்குத் தெரியும். பார்சிலோனா அணிக்காக விளையாடியதால் பல வீரர்களையும் மிக நன்றாக அறிவேன். எனவே பைனல் மிக மிக ஸ்பெஷலான ஒன்றாக, கடுமையான போட்டியாக இருக்கும். அர்ஜென்டினா கேப்டன் மெஸ்ஸி

* இங்கிலாந்து அணி நட்சத்திர வீரர் ஜூட் பெல்லிங்காம், அர்ஜென்டினாவுடனான அரையிறுதியில் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறினார். அனல் பறந்த கடைசிகட்ட நிமிடங்களில் அவர் மெஸ்ஸியை வார்த்தைகளால் சீண்டி கடுப்பேற்றியதையும் பார்க்க முடிந்தது. அதற்கு தனது அற்புதமான ‘அசிஸ்ட்’களால் மெஸ்ஸி பதிலடி கொடுக்க, சீண்டிய பெல்லிங்காம் சின்னாபின்னமானார்.

நடுவர் போட்டி முடிந்தாக விசில் அடித்த பிறகு கொண்டாட்டத்தில் இறங்கிய அர்ஜென்டினாவின் வேலன்டின் பார்கோவுக்கும் பெல்லிங்காமுக்கும் இடையே மோதல் வெடித்தது. ஆத்திரமடைந்த பெல்லிங்காம் பார்கோவின் தலையில் ஓங்கித் தட்ட, பதிலுக்கு அவர் முட்டித்தள்ள… சக வீரர்கள் குறுக்கிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

* உலக கோப்பை அரையிறுதியில் விளையாடிய மிக மூத்த அவுட்ஃபீல்டு வீரர் என்ற பெருமை மெஸ்ஸிக்கு (39 வயது, 21 நாள்) கிடைத்துள்ளது. முன்னதாக, 1958 அரையிறுதியில் மேற்கு ஜெர்மனியின் பிரிட்ஸ் வால்டர், ஸ்வீடனின் கன்னர் கிரென் (இருவரும் 37 வயது, 236 நாள்) இந்த சாதனையை நிகழ்த்தி இருந்தனர்.

* நடப்பு தொடரின் காலிறுதி மற்றும் அரையிறுதியில் மாற்று வீரராகக் களமிறங்கி கோல் போட்டு அசத்தியுள்ளார் லதாரோ மார்டினஸ்.

* மெஸ்ஸி 3வது முறையாக உலக கோப்பை பைனலில் விளையாட உள்ளார். 2014 பைனலில் ஜெர்மனியிடம் தோற்று 2வது இடம் பிடித்த அர்ஜென்டினா, 2022ல் மெஸ்ஸி தலைமையில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.

Tags : England ,Argentina ,Messi ,Atlanta ,FIFA World Cup football ,Atlanta Arena ,Harry Kane ,
× RELATED இறுதிப்போட்டிக்கு முன்னேறிய...