×

இங்கிலாந்துடன் இன்று 2வது ஒருநாள் தொடரை வெல்ல இந்தியா முனைப்பு

கார்டிப்: இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டி கார்டிப், சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் இன்று மாலை 5.30க்கு தொடங்குகிறது. இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையில் விளையாடிய இந்திய டி20 அணி 0-4 என்ற கணக்கில் படுதோல்வியை சந்தித்தது. அடுத்து சுப்மன் கில் தலைமையில் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

பர்மிங்காமில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்று 1-0 என முன்னிலை பெற்றது. டாஸ் வென்று பேட் செய்த இங்கிலாந்து 47.5 ஓவரில் 258 ரன்னுக்கு ஆல் அவுட்டான நிலையில், இந்தியா 45.2 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 262 ரன் எடுத்து வெற்றியை வசப்படுத்தியது. கேப்டன் கில் அதிகபட்சமாக 80 ரன் விளாசி காயத்தால் வெளியேறினார். ஷ்ரேயாஸ் 35 ரன் எடுத்து ரன் அவுட்டாக, ஆல் ரவுண்டர்கள் வாஷிங்டன் சுந்தர் (52*), அக்சர் படேல் (57*) இருவரும் ஆட்டமிழக்காமல் அரை சதம் விளாசி வெற்றிக்கு உதவினர்.

பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டு 4 விக்கெட் கைப்பற்றி இருந்த அக்சர் படேல் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். இந்த நிலையில், தொடர்ச்சியாக 2வது வெற்றியுடன் தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்தியா களமிறங்குகிறது. பும்ரா, வாஷிங்டன், பிரசித், குர்னூர், துபே ஆகியோரும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டதால் இந்தியா மிகுந்த தன்னம்பிக்கையுடன் உள்ளது. அதே சமயம் இப்போட்டியில் வென்று பதிலடி கொடுப்பதுடன் தொடரை வெல்லும் வாய்ப்பையும் தக்கவைக்க இங்கிலாந்து வரிந்துகட்டுவதால் ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.

Tags : India ,England ,Cardiff ,Sophia Gardens ,Indian T20 ,Shreyas Iyer ,
× RELATED இறுதிப்போட்டிக்கு முன்னேறிய...