×

சென்னை மாதவரம் அருகே தனியார் குடோனில் பெரும் தீ விபத்து

சென்னை: சென்னை மாதவரம் தபால் பெட்டி அருகே தனியார் குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கரும்புகை வெளியேறியதால் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சென்னை மாதவரம் பால் பண்ணை தபால் பெட்டி அருகே உள்ள நான்குக்கும் மேற்பட்ட தனியார் நிறுவன கிடங்குகளில் (குடோன்) பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பாத்திரங்கள் தயாரிப்பதற்கான பிளாஸ்டிக் மூலப்பொருட்களும் அட்டைப்பெட்டிகளும் குடோன்களில் அதிகளவில் சேமித்து வைக்கப்பட்டிருந்ததால், தீ மளமளவெனப் பரவி அணைக்க முடியாத அளவிற்குத் தீவிரமாக எரிந்து வருகிறது.

தீயின் தாக்கம் காரணமாக, அருகிலிருந்த அடுத்தடுத்த நான்கு கிடங்குகளுக்கும் (குடோன்) தீ மளமளவெனப் பரவி பெரும் விபத்தாக மாறியது. இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில், மணலி, மாதவரம், செம்பியம் ஆகிய நிலையங்களில் இருந்து வந்த 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தில் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக இறங்கினர்.

கிடங்குகளில் தீ தீவிரமாக எரிந்து வருவதால், அப்பகுதி முழுவதும் அடர்ந்த கரும்புகை மண்டலமாக மாறியுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் போன்ற உடல்நலப் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இந்த விபத்து குறித்துக் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Madhavaram, Chennai ,Chennai ,Madhavaram post ,Madhavaram ,Chennai… ,
× RELATED திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி...