×

ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடியது ஈரான்; பெட்ரோல், டீசல், காஸ் விலை உயரும் அபாயம்: அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதலால் வளைகுடா பகுதியில் பெரும் போர் பதற்றம்

வாஷிங்டன்: அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதையடுத்து பெட்ரோல், டீசல், காஸ் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த மாதம் ஏற்பட்ட தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போதைய மோதல்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஈரான் எல்லையில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சர்வதேச நாடுகளின் கப்பல்கள் சென்று வந்த நிலையில், அனுமதியின்றி சென்றதாக கூறி சைப்ரஸ் நாட்டு கப்பல் மீது ஈரான் ராணுவம் எச்சரிக்கை தாக்குதல் நடத்தியது. இதில் அந்த கப்பலின் இன்ஜின் அறை கடுமையாக சேதமடைந்ததுடன், மாலுமி ஒருவர் மாயமானார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் ஓமன் நாட்டின் வெளியுறவு அமைச்சர்கள் நேற்று அவசரமாக சந்தித்து கடல்வழி பாதுகாப்பை உறுதி செய்வதற்கான வியூகம் குறித்து ஆலோசனை நடத்தினர். தங்களின் எல்லையை அமெரிக்கா மதிப்பதே போர் நிறுத்தத்திற்கான வழி என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, ‘இரு தரப்பும் தற்காலிக ஒப்பந்தத்தை பரஸ்பரம் மதிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார். ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து, அமெரிக்க மத்திய ராணுவ தலைமையகம் ஈரான் மீது 3வது கட்ட வான்வழி தாக்குதலை தொடங்கியுள்ளது.

ஈரான் அரசு தனது அச்சுறுத்தலை நிறுத்தவில்லை என்றால், அந்நாட்டின் மீது ஏவப்பட தயாராக 1000 ஏவுகணைகள் இலக்கு வைக்கப்பட்டு உள்ளதாக அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளதையடுத்து வளைகுடா பகுதியில் பெரும் போர் பதற்றம் நீடிக்கிறது. இந்த சூழலில், அமெரிக்கா நடத்திய சமீபத்திய தாக்குதல்களில் 17 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 115 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஈரான் சுகாதார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் உசேன் கெர்மன்பூர் தெரிவித்துள்ளார். உலகின் 20 சதவீதம் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போக்குவரத்து நடைபெறும் இந்த முக்கிய கடல் பகுதியை ஈரான் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து மூடியுள்ளதால், உலகளவில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 120 டாலர் வரை உயர்ந்தது.

இந்த எல்லையில் அமெரிக்க தலையீடு முற்றிலும் நிறுத்தப்படும் வரை ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படாது என்று ஈரான் ராணுவம் திட்டவட்டமாக அறிவித்துள்ளதால் கச்சா எண்ணெய் வினியோகம் தடைபட்டு பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க ராணுவ முகாம்கள் மீது ஈரான் தாக்குதல்
ஈரானின் கடல்வழித் தாக்குதல் திறனைக் குறைப்பதற்காக அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் நடத்திய கடுமையான குண்டுவீச்சுகளால், ஈரானின் முக்கிய துறைமுக நகரங்களான ஜாஸ்க், சிரிக், பந்தர் அப்பாஸ் மற்றும் சபஹார் ஆகிய இடங்களில் பெரும் தாக்குதல்கள் நடந்தன. இதனால் ஆத்திரமடைந்த ஈரான் புரட்சிகர காவல் படை, ஜோர்டனில் உள்ள இளவரசர் ஹசன் விமான தளம், அல்-தஃப்ரா விமான தளம் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்களைக் குறிவைத்து ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் மூலம் கடுமையான தாக்குதலை நடத்தியது. இந்தத் தாக்குதல்களை ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பு அமைச்சகம் தனது வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் வெற்றிகரமாக முறியடித்த நிலையில், கத்தார், குவைத் மற்றும் பஹ்ரைன் நாடுகளில் ஒலித்த அபாய எச்சரிக்கை சைரன் ஒலிகளால் அங்குள்ள ராணுவத்தினர் தீவிர உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

Tags : Iran ,Strait of Hormuz ,Gulf ,United States ,Washington ,
× RELATED வணிகக் கப்பல் மீது ஈரான் நடத்திய...