×

மாநில மருத்துவ இடங்களை பாதுகாக்க சட்ட, நிர்வாக நடவடிக்கை தேவை: டிடிவி.தினகரன் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் மாநில ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களை பாதுகாக்க தேவையான அனைத்து சட்ட, நிர்வாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு: தமிழகத்தில் ஏற்கனவே மருத்துவப் படிப்புக்கான மொத்த இடங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவை தனியார் பல்கலைக்கழகங்கள், நிகர் பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டுப்பாட்டில் உள்ளன.

தற்போது அரசு ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களிடமிருந்து ஆண்டுக்கு சுமார் ரூ.4 லட்சம் முதல் ரூ.5.5 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், அவை நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக மாறியவுடன், ஆண்டுக் கல்விக் கட்டணம் ரூ.20 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை உயரக்கூடும். தனியார் மருத்துவக் கல்லூரிகளை நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக தரம் உயர்த்திய முடிவை எதிர்த்து சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் அறிவித்துள்ளார்.

அந்த நடவடிக்கைகள் காலதாமதமின்றி உடனடியாக தொடங்கப்பட வேண்டும். அதே நேரத்தில், தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரி இல்லாத மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை அமைப்பது, ஏற்கனவே செயல்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். இடங்களை அதிகரிப்பது, மாநில ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களைப் பாதுகாக்க தேவையான அனைத்து சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளையும் மேற்கொள்வது ஆகியவற்றில் தமிழக அரசு உடனடியாக முனைப்புடன் செயல்பட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Tags : TTV ,Dinakaran ,Chennai ,AMMK ,General Secretary ,TTV Dinakaran ,Tamil Nadu ,
× RELATED திருமா பேசியது என்னை தூக்கி வாரி...