×

நாளை கரூரில் அரசு வேலை வழங்கும் நிகழ்வை முதல்வர் விஜய் ரத்து செய்ய வேண்டும்; அரசு நெய்யில் ’ஸ்வீட்’ செய்யக்கூடாது: கிருஷ்ணசாமி காட்டம்

 

சென்னை: நாளை கரூரில் மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை முதல்வர் விஜய் அவர்கள் ரத்து செய்ய வேண்டும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி கரூரில் நடந்த விஜய் அவர்களின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்தார்கள். அதற்கான காரணம் என்ன? இது திட்டமிட்டு நடந்த செயலா அல்லது விபத்தா? ஏறக்குறைய ஒரு வருடமாகியும் அதற்கான விடை இதுவரை கிடைக்கவில்லை.

இந்த நிகழ்வு குறித்து கரூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. காவல்துறை உயர் அதிகாரிகள் தலைமையில் அமைக்கப்பட்டிருந்த ஆணையம் கலைக்கப்பட்டு, உயர்நீதிமன்ற நீதிபதிகள் இருவரின் கண்காணிப்பில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆதவ் அர்ஜூனா உட்படப் பலரும் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் முக்கியச் சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு அரசு வேலை தந்திடவும், அந்த ஆணையை விஜய் அவர்களே நேரடியாக வழங்கிடவும் நாளை (10.07.2026) அன்று அவர் கரூர் செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே த.வெ.க சார்பில் உதவித்தொகை வழங்கப்பட்டது. முக்கியச் சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டுள்ள அந்த 41 பேரின் குடும்பங்களுக்கு அரசு வேலை கொடுக்கப்பட்டால், அவர்களால் நேர்மையான சாட்சியங்களை வழங்க முடியாது. அவர்கள் அனைவரும் பிறழ் சாட்சிகளாக மாறிவிடுவார்கள். அதனால் உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாமல் போய்விடலாம்; 41 பேரின் மரணத்திற்கு நீதி கிடைக்காமலும் போய்விடும்.

எனவே, நாளை கரூரில் மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை விஜய் ரத்து செய்ய வேண்டும் எனப் புதிய தமிழகம் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : PM ,Vijay ,Government Job Offer Event ,Karur ,Krishnasamy Kadam ,Chennai ,Tamil Nadu ,Krishnasamy ,
× RELATED இந்தியன் வங்கியில் பயங்கர தீ விபத்து: கணினிகள், ஆவணங்கள் எரிந்து சேதம்