×

பதவியை ராஜினாமா செய்த அதிமுக முன்னாள் எம்எல்ஏக்களிடம் சபாநாயகர் இன்று விசாரணை

சென்னை: அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் எம்எல்ஏக்களிடம் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் இன்று விசாரணை மேற்கொள்ள உள்ளார். அதிமுகவினுடைய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் இன்றைய தினம் சபாநாயகரை சந்தித்து விளக்கத்தினை வழங்க இருக்கிறார்கள்.

குறிப்பாக அதிமுகவிலிருந்து சட்டமன்ற உறுப்பினர்களாக வெற்றி பெற்றிருந்த மதுராந்தகம் தொகுதினுடைய சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல், பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் அதேபோன்று தாராபுரம் தொகுதியிலிருந்து வெற்றி பெற்றிருந்த சத்தியபாமா உள்ளிட்ட மூன்று அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு எதிராக செயல்பட்டிருந்தனர்.

அவர்கள் மூவரும் நேரடியாக சபாநாயகரை சந்தித்து அவர்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்கள். அதனை தொடர்ந்து அதிமுக சார்பில் அதிமுகவினுடைய கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி சபாநாயகர் மற்றும் ஆளுநரிடம் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்தது தொடர்பாக குதிரை பேரம் நடத்திருப்பதாகவும் இது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் புகார் அளித்திருந்தார்.

அதனடிப்படையில் மூன்று சட்டமன்ற உறுப்பினர்களும் ராஜினாமா செய்ததற்கு விளக்கத்தை கடிதம் மூலமாக அளிக்குமாறு சபாநாயகர் கேட்டிருந்தார். இதனை தொடர்ந்து கடந்த 20 நாட்களுக்கு முன்னதாக மூன்று சட்டமன்ற உறுப்பினர்களும் ராஜினாமா செய்ததற்கான விளக்க கடிதத்தினை நேரடியாக சபாநாயகரிடம் வழங்கினார்கள்.

அந்த விளக்க கடிதத்தை ஆளுனரிடமும், தங்களுக்கு வழங்க வேண்டும் என அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி சபாநாயகரிடம் கோரிக்கை வைத்திருந்தார். ஏற்கனவே மூவரும் விளக்க கடிதம் அளித்திருந்த நிலையில், நேரடியாக விளக்கத்தினை கேட்டு பெற வேண்டும் என்று அதிமுக சார்பில் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் இன்றைய தினம் அதிமுகவில் இருந்து ராஜினாமா செய்த சட்டமன்ற உறுப்பினர்கள் மூன்று பேரும் விளக்கத்தினை இன்று நேரடியாக வழங்க உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்த ஜெயக்குமார், மரகதம் குமரவேல், சத்யபாமா ஆகியோர் இன்று 11 மணிக்கு தலைமை செயலகத்தில் மீண்டும் சபாநாயகர் முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளனர்.

மூன்று முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களோடு சமீபத்தில் ராஜினாமா செய்த புதுக்கோட்டையினுடைய முன்னாள் அமைச்சராக இருந்த சி. விஜயபாஸ்கரும் அவரது ராஜினாமா தொடர்பான விளக்கத்தையும் நேரடியாக சபாநாயகரிடம் தெரிவிக்க இருக்கிறார். விளக்கம் தெரிவித்ததற்கு பிறகு அந்த விளக்க கடிதம் மற்றும் அந்த நகலினை அதிமுக தரப்பிற்கு வழங்க கூடும் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

 

 

Tags : AIADMK ,Chennai ,Speaker ,J.C.D. Prabhakar ,AIADMK… ,
× RELATED ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள்...