சென்னை: நோயாளிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க ‘நலம் ஏஐ’ வாட்ஸ்அப் சாட் பாட் மூலம் புறநோயாளி சீட்டு பெறும் நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் முதலில் வரிசையில் நின்று புறநோயாளி சீட்டு (OP) சீட்டை பெற வேண்டும். அதன் பிறகு தான் மருத்துவரை சந்திக்க முடியும். இந்த நடைமுறையை எளிதில் மாற்ற ‘நலம் ஏஐ’ வாட்ஸ்அப் சாட் பாட் மூலம் புறநோயாளி சீட்டு பெறும் நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது.
96192 22999 வாட்ஸ்அப் எண் மற்றும் TN e – Nalam என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிற்கு ‘HI’ என்று டைப் செய்து அனுப்பினால், ஒரு முறை கடவுச்சொல் (OTP ) பதிவு செய்யப்பட்ட எண்ணிற்கு வரும் அதனை பதிவு செய்து சேவையை பெற்று கொள்ளலாம். குறிப்பாக புறநோயாளி சீட்டு, மருந்து சீட்டு, பரிசோதனை அறிக்கை, சுகாதார அடையாள அட்டை உள்ளிட்ட சேவைகளை பெறலாம். மேலும் ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மட்டும் மருத்துவரை பார்க்க முன் பதிவு செய்து கொள்ளலாம்.
நாமக்கல், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, சேலம், நாகப்பட்டினம், திருப்பூர், அரியலூர், பெரம்பலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, சென்னை, திண்டுக்கல், மயிலாடுதுறை, திருப்பத்தூர், கன்னியாகுமரி, செங்கல்பட்டு உள்ளிட்ட 22 மாவட்டங்களில் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இந்த சேவையை தமிழக சுகாதாரத்துறை அருண்ராஜ் நேற்று ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் நேற்று தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களில் செயல்படும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புறநோயாளி சிகிச்சை பெறுவதற்கான அனுமதி சீட்டு பெற 96192 22999 என்ற வாட்ஸ்அப் எண்ணை அறிமுகம் செய்துள்ளோம்.
இதற்கு ஆதார் கட்டாயம் இல்லை, ஆபா (ABBA) செயலிக்கு தான் ஆதார் கட்டாயம். அது இருந்தால் தனியார் மருத்துவமனை மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மருத்துவமனை செல்லும் போது ஆபா (ABBA) தேவைப்படும். தற்போது சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளது, மற்ற மாவட்டங்களில் இந்த சேவை படிப்படியாக தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
