×

தனியார் மருத்துவ கல்லூரிகள் நிகர்நிலை பல்கலைக்கழகங்களாக மாறுவதால் மாநில அரசுக்கு ஏற்படும் இடஒதுக்கீட்டு இழப்பை சரிசெய்ய உடனடி நடவடிக்கை: தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: எம்ஜிஆர், அரசுக்கு எந்த செலவுமின்றி தனியார் கல்லூரிகளில் உள்ள படிப்பு இடங்களில் 50 சதவீதம் மாநில அரசிற்கு தரவேண்டும் என்று சட்டம் இயற்றினார். இதனால் தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் ஆண்டுதோறும் 100 பேர் முதல் 500 பேர் வரை பொறியாளர்களாகவும், மருத்துவர்களாகவும் பட்டம் பெற்றுவந்த நிலையில், தற்போது லட்சக்கணக்கான பொறியாளர்களும், பல்லாயிரக்கணக்கான மருத்துவர்களும் உருவாகி வருகின்றனர்.

இதன்மூலம் பொறியியல் துறையிலும், மருத்துவ கல்வியிலும், இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தமிழகத்தில் இந்த ஆண்டு சில தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக சுமார் 600-க்கும் மேற்பட்ட எம்பிபிஎஸ் இடங்கள் குறைகின்றன என்று செய்திகள் வெளிவந்துள்ளன.

தனியார் மருத்துவ கல்லூரிகள் நிகர்நிலை மருத்துவ பல்கலைக்கழகங்களாக மாற்றப்படுவதால் ஏழை, எளிய, நடுத்தர மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. இந்த நிலையை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க தற்போதைய தவெக அரசு முற்பட வேண்டும். தமிழகத்தில் தற்போது செயல்பட்டு வரும் அரசு மருத்துவ கல்லூரிகளின் உட்கட்டமைப்பையும், தரத்தையும் மேம்படுத்தி ஒவ்வொரு மருத்துவ கல்லூரிக்கும் கூடுதலான இடங்களை பெற ஒன்றிய அரசை நாடி அனுமதி பெறவேண்டும்.

இதன்மூலம் தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்களால் குறையக்கூடிய மருத்துவ இடங்களை ஈடுகட்ட முடியும்.  மேலும், இந்தியா முழுவதும் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கோ, பொறியியல் கல்லூரிகளுக்கோ நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கும்போது, மாநில அரசுகளுக்கான இடஒதுக்கீட்டை குறைக்கக்கூடாது என்ற நிபந்தனையை ஒன்றிய அரசும், யு.ஜி.சி-யும் விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

சட்டத்தில் இடமில்லை என்றால் உரிய சட்டத் திருத்தத்தை மத்திய அரசு மேற்கொள்ள, தற்போதைய தவெக அரசும் வலியுறுத்த வேண்டும். அனைத்து மக்களின் உயிரை காப்பது மருத்துவர்கள் என்பதை நினைவில் கொண்டு, இன்றுவரை மருத்துவ துறையில் தமிழகம் முன்னோடியாக இருக்கிறது என்ற நிலை, மேலும் தொடர்வதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தவெக அரசை மீண்டும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

Tags : state government ,Edappadi Palaniswami ,Thaweka government ,Chennai ,AIADMK ,General Secretary ,MGR ,Tamil Nadu ,
× RELATED மானாவாரி விவசாயத்தை பாதுகாக்க கோடை...