சென்னை: தனியார் பள்ளிகள் தகவல் உரிமை சட்டத்தின் வரம்புக்குள் வராது என்று தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறைச் சட்டப்படி கல்வி கட்டணங்களை பள்ளிகளின் அறிவிப்பு பலகைகளில் வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் அரசு நிர்ணயித்துள்ள கல்விக் கட்டண விவரங்களை பள்ளிகளின் விளம்பர பலகைகளில் வெளியிடுவதை கட்டாயமாக்குமாறு தனியார் பள்ளிகள் இயக்குனருக்கு தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் மே 25ம் தேதி உத்தரவிட்டது.
அதன்படி, கட்டண விவரங்களை விளம்பர பலகையில் வெளியிடுமாறு அனைத்து தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சிபிஎஸ்இ, பிற வாரிய பள்ளிகளுக்கு தனியார் பள்ளிகள் இயக்குனர் ஜூன் ஒன்றாம் தேதி சுற்றறிக்கை பிறப்பித்தார். இந்நிலையில் மாநில தகவல் ஆணைய உத்தரவையும், தனியார் பள்ளிகள் இயக்குனர் பிறப்பித்த அறிவிப்பையும் ரத்து செய்யக் கோரி அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் சங்கத்தின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் கே.பழனியப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி, தனியார் பள்ளிகள் தகவல் உரிமை சட்டத்தின் வரம்புக்குள் வராது என்ற போதிலும், தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டப்படி நியாயத்தன்மையை வெளிப்படுத்த மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும் கல்விக் கட்டண விவரங்களை விளம்பர பலகைகளில் வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளார்.
