புதுடெல்லி: ஆன்லைன் மூலம் பயங்கரவாத கருத்துகளை பரப்பி, இந்தியாவில் இஸ்லாமிய அரசை நிறுவ முயலும் வழக்கில் நாடு முழுவதும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை நேற்று வௌியிட்ட அறிக்கையில், “ஐஎஸ்ஐஎஸ் மற்றும் ஏகியூஐஎஸ் ஆகிய பயங்கரவாத அமைப்புகளின் சித்தாந்தங்களை பரப்பி, ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக, வன்முறை கலந்த ஜிகாத் மூலம் இந்தியாவில் இஸ்லாமிய அரசை நிறுவுவதை நோக்கமாக கொண்ட சதித்திட்டம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி வருகிறது.
அதன்ஒரு பகுதியாக நேற்று ஆந்திர பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், மேற்குவங்கம், பீகார், ராஜஸ்தான், குஜராத் மற்றும் டெல்லி ஆகிய இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தனித்தனியாக சோதனை நடத்தினர். மொத்தம் 20 இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் டிஜிட்டல் வடிவிலான சாதனங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த சாதனங்கள் தடயவியல் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டு, தொடர் விசாரணை நடத்தப்படும் எனவும் அதிகாரிகள் கூறினர்” என தெரிவித்துள்ளது.
