×

நலம் யோகம்!

நன்றி குங்குமம் தோழி

உடலுக்கு ஒளி… மனதுக்கு அமைதி!

யோகம் மற்றும் தாந்திரீக மரபுகளின்படி, மனித உடல் என்பது வெறும் உடல் மட்டுமல்ல… ஸ்தூல சரீரம், சூக்கும சரீரம், காரண சரீரம் எனப்படும். அதாவது, பரு உடல், நுண் உடல், காரண உடல் என மூன்றாக கணக்கிடுகிறார்கள்.நுண் உடல் அல்லது சூக்கும சரீரத்தை, ஆற்றல் உடல் என்றும் குறிப்பிடலாம். இந்த ஆற்றல் உடலில்தான் பிராண சக்தி என்னும் உயிரோட்டம் பாய்ந்து கொண்டு இருக்கிறது. இந்த பிராண சக்தி பாயும் முக்கிய மையங்கள்தான் சக்கரம் என்று அழைக்கப் படுகிறது. சக்கரம் என்பது சமஸ்கிருத வார்த்தை. தமிழில் இதற்கு சுழளும் சக்கரம் அல்லது ஆற்றல் வட்டம் என்று பொருள்.

பிராண சக்தி உடலில் ஓடும் பாதையை நாடிகள் என்று குறிப்பிடுகிறார்கள். சக்கரங்கள் உடலின் நடுப் பகுதியில் ஓடும் சுழுமுனை நாடி வழியாக அமைந்துள்ளன என்று யோக சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதன் இருபுறமும் இடநாடி மற்றும் பிங்கல நாடி ஓடுகின்றன.இடநாடி என்பது சந்திர சக்தியை குறிக்கும். பிங்கல நாடி என்பது சூரிய சக்தியை குறிக்கும். சுழுமுனை என்பது ஆன்மீக விழிப்புணர்விற்கான மையப் பாதை. இந்த மூன்று நாடிகளும் சந்திக்கும் முக்கிய இடங்களே சக்கரங்கள்.

யோக கண்ணோட்டத்தில் ஒவ்வொரு சக்கரமும் ஒரு குறிப்பிட்ட உடல் பகுதியுடன் தொடர்புடையது. குறிப்பாகச் சொன்னால், நாளமில்லா சுரப்பிகளோடு(Endocrine glands) இணைக்கப்பட்டுள்ளது. குண்டலினி சக்தி மூலாதார சக்கரத்தில் உறங்கி கிடக்கிறது. தியானம், பிராணாயாமம், ஆசனம், மந்திரம், ஜபம் மற்றும் யோக சாதனைகளின் மூலம் இந்த சக்தி மேல் நோக்கி எழுந்து ஒவ்வொரு சக்கரத்தையும் கடந்து சஹஸ்ராரத்தை அடையும்போது உயர்ந்த ஆன்மீக அனுபவம் ஏற்படுகிறது.

யோக மரபில் ஆசனங்கள் வெறும் உடற்பயிற்சிகள் அல்ல. உடலில் பிராண சக்தியின் ஓட்டத்தை மேம்படுத்தி சக்கரங்களின் செயல்பாட்டை சமநிலைப்படுத்த உதவும் கருவிகளாக கருதப்படுகின்றன.ஒரு ஆசனத்தில் உடலை நீட்டும் பொழுது, முறுக்கும் பொழுது அல்லது நிலைப்படுத்தும் பொழுது, அந்தப் பகுதியில் உள்ள நரம்புகள், தசைகள், சுரப்பிகள் முழுவதும் ஆற்றல் மையங்களால் தூண்டப்படுகின்றன. இதனால் பிராண சக்தியின் ஓட்டம் சீராகி சக்கரங்கள் தூண்டப்படுகின்றன அல்லது நிலைப்படுத்தப்படுகின்றன என்று கூறலாம்.

கபோடாசனம் (Pigeon Pose)

இடுப்பு, தொடைகள் மற்றும் முதுகுத் தண்டின் நெகிழ்வுத் தன்மையை மேம்படுத்தும் சிறந்த ஆசனம். இதன் நோக்கம் உடலை வற்புறுத்தி ஆழமாக வளைப்பதல்ல. இடுப்பு, முதுகு மற்றும் மனதை மென்மையாய் திறந்து, உடலின் சுதந்திரமான இயக்கத்தை, சமநிலையை உருவாக்குவது ஆகும்.

செய்முறை

இதனை பர்வதாசனத்திலிருந்து தொடங்க வேண்டும். வலது முழுங்காலை முன் நோக்கிக் கொண்டு வந்து இரண்டு உள்ளங்கைகளுக்கும் நடுவில் வைக்க வேண்டும். இடுப்பு பகுதியை நன் றாக கீழே இறக்க வேண்டும். இடது கால் பின் நோக்கி நீட்டி இருக்க, இரண்டு உள்ளங்கைகளையும் தரையில் உறுதியாக பிடித்து பதித்து, நன்றாக மார்பை திறந்து மேல் உடலை மெதுவாக பின்நோக்கி நீட்ட வேண்டும். இதுவே அடிப்படை கபோடாசன நிலை.

மேம்பட்ட நிலை (Advanced Pose)

பின்னால் நீட்டியிருக்கும் இடது காலை முழங்காலில் மடக்க வேண்டும். இடது முழங்கை பகுதியால் பாத விரல்களை பற்றிக் கொண்டு பின்னர் வலது கையை கொண்டு இடது கைவிரல்களை பற்ற முயற்சிக்கலாம்.

ராஜ கபோடாசனம்

இரண்டு கைகளையும் தலைக்கு மேலே கொண்டு சென்று பின்னால் உயர்த்தப்பட்ட பாத விரல்களை பற்றிக் கொள்ளலாம். இன்னும் மேம்பட்ட நிலையில் இதனை செய்ய விரும்பினால், பாதவிரல்களை அப்படியே கொண்டு வந்து தலைப்பகுதி அல்லது நெற்றியில் தொடும்படி வைத்துக் கொள்ளலாம். இதுவே ராஜ கபோடாசனம்.

இந்த நிலையில் மார்பு நன்றாக திறந்து முதுகுத்தண்டு ஆழமாக பின்நோக்கி வளைந்திருக்கும். உடலின் நெகிழ்வுத் தன்மை, வலிமை மற்றும் பயிற்சி நிலைக்கு ஏற்ப இந்த ஆசனத்தின் வெவ்வேறு நிலைகளை பயிற்சி செய்யலாம். உடலினை துன்புறுத்தாமல், சுவாசத்தை சீராக வைத்து, மெதுவாக ஒவ்வொரு நிலைக்கும் முன்னேறுவது இதில் அவசியம்.

முன்பக்கம் வளைதல் (Forward bending)

கபோடாசனத்தில் இருந்து இடுப்பின் நிலையை மாற்றாமல், மேல் உடலை மட்டும் மெதுவாக முன்னோக்கி கொண்டு சென்று, இரண்டு கைகளையும் நீட்டி, முன்பக்கமாக குனிய வேண்டும். இந்த நிலையில் 30 வினாடிகள் வரை, இயல்பான சுவாசத்துடன் இருக்கலாம். இந்த முன்பக்கம் வளைதல் (Forward bending) கபோடாசனத்தின் ஆழமான, பின் பக்க வளைவுக்குப்(Back bending) பிறகு முதுகுத் தண்டிற்கும், இடுப்பு பகுதிக்கும் ஓய்வளிக்கும் தளர்வு நிலையை கொடுக்கிறது. இடுப்பின் வெளிப்புறத் தசைகள் மற்றும் புட்டப் பகுதியில் உள்ள இறுக்கத்தை மென்மையாய் விடுவிக்கவும் உதவும்.

வலது பக்கம் செய்தது போலவே இடது பக்கமும் அதே கால அளவில் செய்தல் வேண்டும்.

பலன்கள்

* பிட்ட தசைகள்(Glutes) மற்றும் இடுப்பு மடிப்புத் தசைகள் (Hip Flexors) பகுதியின் நெகிழ்வுத் தன்மையை மீட்டெடுக்க உதவும்.

* தொடைகள் மற்றும் இடுப்பு தசைகளின் இறுக்கத்தை குறைக்கும்.

* கீழ் முதுகு வலியை குறைக்கும்.

* முதுகுத் தண்டின் அமைப்பை (Posture) சீராக்கும்.

* இடுப்புக்குழி(Pelvic region) ஆரோக்கியமே பெண்கள் மற்றும் ஆண்களின் இனப் பெருக்க உறுப்பு ஆரோக்கியத்தில் முக்கியமானது என்பதால்,இந்தப் பகுதிகளின் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.

* ராஜ கபோடாசனம், இடுப்பு மற்றும் இடுப்புக் குழி (Pelvic region) பகுதிகளின் திசுக்களுக்கு ஊட்டச்சத்து அளிக்கிறது.

* நரம்பு மண்டலத்தை யும் அமைதிப்படுத்தும்.

* மன அழுத்தம் குறையும்.

* சுவாதிஷ்டா சக்கரம் மற்றும் அனாகத சக்கரத்தை தூண்டும்.

இடுப்பு பகுதியை தளர்த்தி பலப்படுத்துதல்

நெகிழ்வான மற்றும் வலுவான இடுப்புகள், சுறுசுறுப்பான முதுமைக்கான முதலீடு. வலிமையும், நெகிழ்வுத் தன்மையும் இணையும் போதே உடல் நீண்ட காலம் ஆரோக்கியமாய் இயங்கும். இதனால் படிக்கட்டுகளில் ஏறுவது, தரையில் அமர்வது, எழுவது போன்ற செயல்கள் எளிதாகின்றன. நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு, பிட்டம் மற்றும் தொடை தசைகளில் உண்டாகும் இறுக்கத்தினை இது குறைக்கும்.

40 வயதுக்கு மேல் இடுப்பு மூட்டுகளும், அதனைச் சுற்றியுள்ள தசைகளும் மெல்ல நெகிழ்வுத் தன்மை மற் றும் அதன் வலிமையை இழக்கத் தொடங்குவதால், இயக்கத்தில் சற்று சிரமம் நேரலாம்.
ஆரோக்கியமான, நெகிழ்வுத் தன்மை உள்ள இடுப்பு மூட்டுகள் உடலின் சம நிலையை பராமரிக்க உதவும். இடுப்பின் இயக்கம் மேம்படும் பொழுது, கீழ் முதுகின் மீது விழும் அழுத்தம் குறைகிறது. இதனால் கீழ் முதுகு வலியினை தவிர்க்க முடியும். வயதான காலத்தில் பேலன்ஸ் தவறி விழும் அபாயம் குறைவதுடன், இயக்க திறன் இழப்பையும் தடுக்க முடியும்.
செய்யக்கூடாதவை…

* முழுங்கால் வலி மற்றும் இடுப்பில் பிரச்னைகள் உள்ளவர்கள் யோகா ஆசிரியர் வழிகாட்டுதலில் மேற்கொள்ள வேண்டும்.

* ஆசனத்தை செய்யும் பொழுது வலி ஏற்பட்டால், உடலை வற்புறுத்தி செய்தல் கூடாது.

* கர்ப்பகால பெண்கள், யோகா ஆசிரியர் வழிகாட்டுதலில், எளிய மாற்றங்களோடு மேற்கொள்ளலாம்.

(நலம் யோகம் தொடரும்…)

தொகுப்பு: ஆ.வின்சென்ட் பால்

Tags :
× RELATED மூட்டு வலியும் பெண்களும்!