×

உணவும் மருந்தும்!

நன்றி குங்குமம் டாக்டர்

நாம் தினமும் சமையலில் பயன்படுத்தும் பல உணவுப் பொருட்கள் வெறும் சுவைக்காக மட்டுமல்ல; அவற்றில் உடலுக்கு தேவையான பல மருத்துவ குணங்களும் மறைந்திருக்கின்றன. சமையலறையில் இருக்கும் மஞ்சள், இஞ்சி, பூண்டு, சீரகம், வெந்தயம் போன்ற இயற்கை பொருட்கள் பல ஆண்டுகளாக பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது முதல் செரிமானத்தை மேம்படுத்துவது வரை, நம் அன்றாட உணவின் மூலம் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் பல நன்மைகளை இவை வழங்குகின்றன. உணவாக நாம் எடுத்துக்கொள்ளும் இதுபோன்ற சில பொருட்களின் மருத்துவ குணங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.

கடுகு

கடுகு, சமையலில் தவிர்க்க முடியாத ஒரு பொருளாகும். கடுகு, சமையலில் மணம் சேர்ப்பது மட்டுமல்லாமல் மருத்துவ குணம் நிறைந்தது. தமிழர்கள் கடுகை தாளிக்க மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர். ஆனால், வட நாட்டினர் அதன் எண்ணெயை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.கடுகு புற்றுநோய்க்கு சிறந்த மருந்தாக உள்ளது என்பதை ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, கடுகைப் பயன்படுத்தினால் புற்றுநோய் வராமல் தடுத்துக் கொள்ளலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். கடுகு, உடலிலுள்ள நச்சுக்களைக் கொல்லும் ஆற்றல் பெற்றதாக உள்ளது.

மஞ்சள்

மஞ்சள் சமையலில் சேர்க்கப்படும் மசாலாப் பொருட்களில் ஒன்றாக இருந்தாலும், மருத்துவ குணம் அதிக அளவில் கொண்டுள்ளது. குறிப்பாக வாயில் உண்டாகும் புற்றுநோய்க்குச் சிறந்த மருந்தாக இருக்கின்றது என்பதை ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. மஞ்சள் கிருமி நாசினியாக பயன்படுகிறது. மேலும், மஞ்சள் நோயெதிர்ப்புச் சக்தியை கூட்டுகிறது. மஞ்சள் காயங்களுக்கு மருந்தாகிறது.

மஞ்சள் சாறு 50 மில்லி 3 வேளைகள் அன்றாடம் பருகி வந்தால் வாய்ப்புற்று நோய் குணமாகும் என்று சொல்லப்படுகிறது. மஞ்சள் சாறு குடிப்பதால் பசி குறையாது, ஈரல், சிறுநீரகம் பாதிப்படையாது.

லவங்கப்பட்டை

லவங்கப்பட்டை நடுத்தர உயரமுள்ள மரமாகும். இதன் பட்டைகளை மருத்துவத்திற்கும் சமையலுக்கும் பயன்படுத்தப்படுகிறது. பட்டையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயும் பயன்படுகிறது. லவங்கப்பட்டை காரச் சுவை யுள்ளது. இது திசுக்களை சுருங்கவும் விரியவும் வைக்கும் தன்மை கொண்டது. சுரத்தைப் போக்கும் தன்மை உடையது. சிறுநீரைப் பெருக்கும். வாயுவை வெளியேற்றும்.

லவங்கப்பட்டையின் சிறு துண்டை வாயிலிட்டுமென்றால் வாய் துர்நாற்றம் போகும். லவங்க எண்ணெயை பஞ்சில் நனைத்து சொத்தைப் பல்லில் வைத்தால் வலி உடனே நிற்கும். சிறிதளவு தண்ணீர் அல்லது பாலில் சில துளிகள் லவங்க எண்ணெய் கலந்து குடித்தால், ஓக்காளம், வாந்தி நிற்கும். லவங்கப்பட்டை, சோம்பு, சமஅளவு எடுத்து தண்ணீர்விட்டு அரைத்துக் குடித்தால் அஜீரணம் போகும். அடிவயிற்றுவலி குணமாகும்.

தேயிலை

தேயிலைச் செடியில் இலை, தண்டு, மணம் வீசும் மலர்கள், விதைகள் இருந்தும் இலைகளை மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர்.தேயிலையில் தயாரிக்கும் தேநீர் அருந்த ஜீரணமுண்டாகும், வாயுவை அகற்றும், சிறுநீரை பெருக்கும், நரம்புகளுக்கு சத்தூட்டும்.

பாலும் சர்க்கரையும் சேர்க்காத தேனீர் மிகச் சிறந்த பயனைத் தரும். பாலும் சர்க்கரையும் சேர்த்தால் 50 சதவீத பலன் மட்டுமே கிடைக்கும்.தொண்டைப்புண், கரகரப்பு இருந்தால் தேனீரில் சிறுதுண்டு இஞ்சியை நசுக்கிப் போட்டுக் கொடுக்கவும். கண்நோயில் வீக்கம், வலி, சிவந்து காணப்பட்டால் தேனீர் கஷாயத்தை கொண்டு கண்களைக் கழுவினால் வலி, வீக்கம், சிவப்பு நிறம் நீங்கும். தேனீரில் பொட்டாசியம், மக்னீஷியம், பீட்டாகரோட்டீன் எனப்படும் நோயெதிர்ப்புத் திறன் மிக்க சத்துகள் அடங்கியுள்ளது. மேலும், வைட்டமின்கள் பி1, பி2, பி6, பன்டோதிமிக் அமிலம் உள்ளன மற்றும் நிகோடீன் அமிலம், வைட்டமின் சி, போலிக் அமிலம் ஆகியவை உள்ளன.

கொத்துமல்லி

கொத்துமல்லியை அறியாதார் யாருமிருக்க முடியாது. நம்முடைய அன்றாட உணவில் சேர்க்கப்படும் அவசியமானதாகக் கருதப்படுவது தமிழரின் சமையலில் புத்துணர்வூட்டும் இனியதொரு தாவரம் கொத்துமல்லியாகும். இதனுடைய காய்கள் – தனியா என்று அழைக்கப்படுகின்றன.கொத்துமல்லி இலைகள் வலி நிவாரணியாக உள்ளது. வீக்கத்தைக் குணப்படுத்துகிறது.

கொத்துமல்லி விதைகள் சீரணத்தையுண்டாக்குகின்றது. வாயுவை நீக்குகின்றது. ரத்தப் போக்கைத் தடுக்கின்றது. வீக்கத்தைத் தடுக்கின்றது. புழுக்களைக் கொல்லுகின்றது. தனியா விதைகளையும், சுக்கையும் இடித்துப் போட்டு கஷாயமாக்கி பருகி வர அஜீரணம், வயிற்றுவலி நீங்கும். கர்ப்பமடைந்த பெண்களுக்கு தனியா கஷாயத்தை 5-ஆவது மாதத்திலிருந்து கொடுத்துவந்தால் சிறுநீர் நன்கு வெளிப்படும். அதனால் காலில் வீக்கம் ஏற்படாது.

முருங்கை

நமக்குத் தெரிந்த உணவு வகைகளிலேயே மிகவும் அற்புதமான ஆற்றல் நிறைந்தது முருங்கை ஆகும். இதில் உயிர்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. முருங்கைக் கீரை, முருங்கைக்காய் ஆகிய இரண்டையும் நாம் சமையலில் அடிக்கடி பயன்படுத்துவோம். இந்த இரண்டுமே சுவையும் மணமும் கொண்டவையாகும். மேலும், முருங்கைப் பிஞ்சுகளை சமைத்து சாப்பிட்டால் வாதம், பித்தம், சளி தீரும்.

பூக்களை உணவுடன் சேர்த்தால் உடல் பலப்படும். கண்ணுக்குக் குளிர்ச்சியூட்டும். சீதளத்தை முறிப்பதால் ஜுரம், தொண்டையில் வலி, அடைப்பு நீங்கும்.முருங்கை மரத்தின் வேர்ப்பட்டையைக் கஷாயமிட்டுச் சாப்பிட்டால் வாத வீக்கங்கள் குணமாகும். இருதயத்தை பலப்படுத்தும். முருங்கை வேர்ப்பட்டையைக் கஷாயமிட்டு தினமும் 3 வேளைகள் குடிக்க கற்கள் உடைந்து வெளிப்படும். இந்த கஷாயத்தை தண்ணீரில் கலந்து அந்த தண்ணீரில் சிறிது நேரம் அமர்ந்து இருந்தால், மூல நோய் உள்ளவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். முருங்கைக்கீரை, காய், பூக்கள் ஆகியவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.

தொகுப்பு:- ஸ்ரீ தேவி

Tags : Kumkum ,
× RELATED இயற்கை 360°