காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே அரசு மருத்துவமனையில் ஆதார் கார்டு ஓ.டி.பி. கேட்பதால் மொபைல் இல்லாத புற நோயாளிகள் அவதி அடைந்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்குச் சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தினமும் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். இந்நிலையில் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் புறநோயாளிகளுக்கு (OP) சீட்டு வழங்கப்படும்போது, அவர்களது ஆதார் எண்ணை இணைக்கும் புதிய நடைமுறை செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
இவ்வாறு ஆதார் அட்டையை இணைப்பதன் மூலம், நோயாளியின் உடல்நலம் மற்றும் நோய் குறித்த முழு விவரங்களும் கணினியில் டிஜிட்டல் முறையில் துல்லியமாகப் பதிவாகும். இதனால் அவர்கள் அடுத்த முறை சிகிச்சை பெற வரும்போது முந்தைய மருத்துவ விவரங்களை எளிதாக அறிய முடியும்.
இதன் மூலம், நோயாளிகள் நாட்டின் எந்தவொரு அரசு மருத்துவமனைக்குச் சென்றாலும், அவர்களின் முந்தைய மருத்துவ வரலாறு மற்றும் நோய்த் தன்மையை மருத்துவர்கள் எளிதில் அறிந்துகொண்டு, அதற்கேற்ப உரிய சிகிச்சை அளிக்க முடியும் என மருத்துவமனை நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புறநோயாளி (OP) சீட்டுடன் ஆதார் எண் இணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மொபைல் போன் இல்லாதவர்கள், முதியவர்கள் மற்றும் எழுத்தறிவு குறைந்தவர்கள் எளிதாகப் பயன்பெறும் வகையில், கைரேகை (Biometric) மூலம் பதிவு செய்யும் சிறப்பு வசதியும் செய்யப்பட்டுள்ளது.
மேலும், இது குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளரிடம் கேட்டபோது, ‘இந்த நடைமுறை கடந்த 4 மாதங்களாகவே செயல்பாட்டில் உள்ளது; இதன் மூலம் நோயாளிகளின் முழு விவரங்கள், அவர்களின் நோய் குறித்த தகவல்கள் மற்றும் அளிக்கப்படும் சிகிச்சைகளை எளிதாகத் தெரிந்துகொள்ள முடியும்’ எனத் தெரிவித்தார்.
அதே வேளையில், இந்த ஆதார் அட்டை இணைப்பு நடைமுறை குறித்துப் போதிய விழிப்புணர்வு இல்லாததால் குழப்பமடைந்த நோயாளிகள், நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து புறநோயாளி (OP) சீட்டுகளைப் பெற்றுச் சிகிச்சைக்காகச் சென்று வருகின்றனர்.
