கோவை: கோவை மின்வாரியத்தில் பதவி உயர்வு பெற்ற அதிகாரிகள் பணியிட மாறுதல் விவகாரத்தில் மாவட்ட பொறுப்பு அமைச்சர் சம்பத்குமாரின் தலையீடு இருப்பதாகவும், அவரது சிபாரிசின் பேரில் சில ஊழியர்கள் பணியிட மாறுதல் செய்யாமல் அதே அலுவலகத்தில் பணியாற்றி வருவதாகவும் பாதிக்கப்பட்ட மின் பணியாளர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
கோவை மின் மண்டலம் உள்பட அனைத்து மண்டலத்திற்கு உட்பட்ட அலுவலகத்தில் பதவி உயர்வு பெற்றவர்கள் பணியிட மாறுதல் மற்றும் விருப்ப இடமாறுதல் பெற்றவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியிடத்தில் பணியில் சேர வேண்டும் என உத்தரவிடப்பட்டது. தற்காலிக பணியிட மாறுதல் பெற்றவர்களும் உடனடியாக பணி விடுவிப்பு செய்து அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அலுவலகத்தில் உடனடியாக பணியில் சேர வேண்டும் என சென்னை மின் வாரிய தலைமைப்பொறியாளர் அனைத்து மண்டல தலைமைப்பொறியாளர், மேற்பார்வை பொறியாளருக்கு உத்தரவிட்டிருந்தார்.
ஆனால், கோவை மண்டலத்தில் குறிப்பிட்ட சில பணியாளர்களை மட்டும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் சேர நிர்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக புகார் எழுந்துள்ளது. தவிர, பதவி உயர்வு பெற்ற மற்றும் பணியிட மாறுதல் பெற்ற அலுவலர்களை மட்டும் விடுவிப்பு செய்யாமல் அதே அலுவலகத்தில் தற்காலிக பனியிட மாறுதல் என்ற பெயரில் பணி மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தற்காலிக பணியிட மாறுதல் என்பது ஆறு மாதம் வரை மட்டும் பணி செய்ய வேண்டும். அதற்கு தலைமை பொறியாளர் அனுமதி அளிக்க வேண்டும் என்ற விதிகளை மீறி கோவை மாநகர் வட்டம் உள்ளிட்ட பல வட்டங்களில் தலைமை பொறியாளர் உத்தரவினை மீறி செயல்பட்டு வருகின்றனர் என மின்வாரிய பணியாளர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.
மேலும், பணி விடுப்பு செய்தவர்களின் பட்டியலையும் சென்னை தலைமை அலுவலகத்திற்கு அனுப்பாமல் அலட்சியப்படுத்தி வருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். சில பணியாளர்களை மட்டும் விடுவிப்பு செய்த நிலையில், தனக்கு வேண்டியவர்களை மட்டும் மின்வாரியத்தின் உத்தரவினை மீறி அதே அலுவலகத்தில் பணிபுரிய கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் சரத்குமார் தலையீடு இருப்பதாக பாதிக்கப்பட்ட பணியாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். மாவட்ட பொறுப்பு அமைச்சரிடம் பணியாளர்கள் சிலர் தங்களை இதே அலுவலகத்தில் பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என கேட்டதாகவும், அதனால் அவர்களுக்கு அவர் சிபாரிசு செய்து இருப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், மின்வாரிய உத்தரவினை கடைபிடிக்காமல், அலட்சியம் காட்டும் மின்வாரிய அதிகாரிகள் மீது மின்துறை அமைச்சர் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்வாரிய உத்தரவின்படி அனைவரையும் விடுவிப்பு செய்து அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அலுவலகத்தில் பணியில் சேர நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது பதவி உயர்வு பெற்றவர்களின் பதவி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என மின் பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தவிர, அமைச்சரின் தலையீடு தொடர்பாக விசாரிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
