×

கருப்பண்ணசாமி கோயில் நில ஆக்கிரமிப்புகளை அகற்ற வழக்கு: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

 

மதுரை, ஜூலை 3: மதுரை கோயில் மற்றும் அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிய வழக்கில், மாநகராட்சி ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மானகிரியை சேர்ந்த செல்வகுமார், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை மாநகராட்சி வார்டு 18ல் உள்ள கருப்பண்ணசாமி கோயில் மற்றும் சுமார் 54 சென்ட் அரசு புறம்போக்கு நிலத்தை சில தனிநபர்கள் ஆக்கிரமித்து, சட்டவிரோதமாக வேலி அமைத்துள்ளனர். இதனால் கோயிலுக்கு பொதுமக்கள் சென்று வர சிரமமடைகின்றனர்.

மேலும், இதுதொடர்பாக தாம் அளித்த புகாரின் அடிப்படையில் தனக்கு மிரட்டல்கள் வருகின்றன. எனவே கோயில் நிலத்தை அளவீடு செய்து மீட்க வேண்டும். தனக்கு மிரட்டல் விடுத்தவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் கார்த்திகேயன், சக்திவேல் முன் விசாரணைக்கு வந்தது. இந்து சமய அறநிலையத்துறையின் மதுரை மண்டல இணை ஆணையர் மற்றும் மதுரை மாநகராட்சி ஆணையர் இணைந்து, சம்பந்தப்பட்ட நிலத்தை நேரில் அளவீடு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 22க்கு தள்ளி வைத்தனர்.

 

Tags : Karuppannaswamy Temple ,Madurai ,Court ,Madurai temple ,Selvakumar ,Managiri, Madurai ,
× RELATED அழகர் மலையில் குட்டியுடன் கரடி உலா