×

அம்பையில் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் கைது

 

அம்பை, ஜூலை 3: அம்பை பகுதியில் பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவரை சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு போக்சோவில் கைது செய்தனர். அம்பை பகுதியில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் சார்பில் சமீபத்தில் பள்ளி மாணவிகளுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, பாலியல் குற்ற சம்பவங்கள் நடந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அந்நிகழ்ச்சியில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் உதவி ஆய்வாளர் தனது செல்போன் எண்ணை மாணவிகளிடம் பகிர்ந்து, ஏதேனும் புகார் அல்லது பிரச்னை ஏற்பட்டால் தயக்கமின்றி நேரடியாக தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், அந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி மாணவி ஒருவர், தங்கள் பகுதியில் வசித்து வரும் கண்ணன் (49) என்பவர் தொடர்ந்து தனக்கு பாலியல் ரீதியாக சீண்டல் செய்து வருவதாக உதவி ஆய்வாளரை செல்போன் மூலம் தொடர்புகொண்டு தெரிவித்தார்.
தகவல் கிடைத்தவுடனேயே சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் விரைந்து களமிறங்கி விசாரணை மேற்கொண்டு நேற்று முன்தினம் கண்ணனை கைது செய்தனர். மேலும், குழந்தைகள் நல அலுவலர்களுக்கும் உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு, அம்பை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சிங்கப்பெண் அதிரடி பாதுகாப்பு படை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட தொடர்பு எண் மூலம் மாணவி தைரியமாக புகார் அளித்ததையடுத்து, குறுகிய நேரத்திலேயே குற்றவாளி கைது செய்யப்பட்டிருப்பது சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் செயல்திறனையும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பில் அதன் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது. சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினரின் இந்த துரிதமான நடவடிக்கைக்கு அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Tags : Ambai ,Sinhapen Special Task Force ,SSTF ,
× RELATED தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.7.49...