பாங்காக்: தாய்லாந்தில் 11 வயது சிறுவன் ஓட்டி சென்ற வாகனம் மோதியதில் புத்த துறவிகள் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலிருந்து வடகிழக்கே சுமார் 600 கிமீ தொலைவில் உள்ள முக்தஹான் மாகாணத்தை சேர்ந்த புத்த துறவிகள் 35 பேர் மற்றும் 5 பக்தர்கள் நேற்று காலை சாலையில் நடைப்பயணம் சென்றுள்ளனர்.
அப்போது அதிவேகமாக வந்த பிக்அப் வேன் ஒன்று திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து, தாறுமாறாக ஓடி நடைப்பயணம் சென்று கொண்டிருந்த புத்த துறவிகள் குழுவினர் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 5 துறவிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி மேலும் 3 துறவிகள் உயிரிழந்தனர். மேலும் 14 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே பெற்றோர் அனுமதியின்றி பிக்அப் வாகனத்தை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியது 11 வயது சிறுவன் என தெரிய வந்துள்ளது. அந்த சிறுவன் தற்போது காவல்துறையின் கட்டுப்பாட்டில் விசாரிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
