×

சென்னையில் இருந்து ஊட்டிக்கு வந்த மருத்துவக்கல்லூரி மாணவிக்கு பஸ்சில் பாலியல் தொல்லை: ஆம்னி பேருந்து ஓட்டுநர் கைது

ஊட்டி: சென்னையில் இருந்து ஊட்டிக்கு வந்த தனியார் ஆம்னி பேருந்தில் மருத்துவக்கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிரைவரை போலீசார் கைது செய்தனர். நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த கல்லூரியில் தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்கள், வெளி மாநில மாணவ, மாணவிகள் ஏராளமானோர் பயின்று வருகின்றனர். சென்னையை சேர்ந்த 20 வயது மாணவி ஒருவரும் இங்கு மருத்துவம் பயின்று வருகிறார்.

இவர் விடுமுறைக்காக சென்னைக்கு சென்றுவிட்டு கடந்த 1ம் தேதி இரவு சென்னையில் இருந்து ஊட்டிக்கு தனியார் ஆம்னி பேருந்தில் முன்பதிவு செய்து பயணித்தார். இரவு 8.30 மணிக்கு சென்னையில் புறப்பட்டு நேற்று முன்தினம் (2ம் தேதி) அதிகாலை நீலகிரி மாவட்டத்திற்கு வந்தது. பேருந்தின் மேல் பெர்த்தில் உறங்கி கொண்டிருந்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது. அதிர்ச்சியடைந்த மாணவி விழித்து சத்தமிட்டார். உடனே அந்த நபர் ஓடிவிட்டார். சத்தம் கேட்டு மற்ற பயணிகள் எழுந்து பார்த்தனர்.

அப்போது மாணவி வெள்ளை நிற ஆடை அணிந்து இருந்தவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.  இதனை தொடர்ந்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அனைவரிடமும் விசாரணை நடத்தினர். ஓட்டுநர்களும் வெள்ளை நிற ஆடை அணிந்திருந்த நிலையில் அவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது மாற்று ஓட்டுநராக வந்த மதுரையை சேர்ந்த கார்த்திகேயன் (40) என்பது தெரியவந்தது. இதுகுறித்து ஊட்டி நகர மத்திய போலீசார் வழக்கு பதிந்து கார்த்திகேயனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

* மூதாட்டியை கொன்று நகைகள் கொள்ளை
தேனி அருகே அமச்சியாபுரத்தை சேர்ந்தவர் பார்வதி (எ) ரோஸ்லின்மேரி (74). கணவர் இறந்து விட்டார். இவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். ரோஸ்லின்மேரி பேத்தி குணபாக்கியவதியுடன் தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இருவரும் வீட்டில் தனித்தனி அறையில் தூங்கியுள்ளனர். நேற்று காலை பாட்டியை எழுப்புவதற்காக குணபாக்கியவதி சென்றுள்ளார்.

அப்போது ரோஸ்லின்மேரி படுகாயங்களுடன் சடலமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர் அணிந்திருந்த நகைகள் மாயமாகி இருந்தது. தகவலறிந்து கண்டமனூர் விலக்கு போலீசார், வந்து விசாரணை நடத்தினர். எவ்வளவு பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது என்ற விபரம் தெரியவில்லை. நகைகளுக்காக மூதாட்டி கொலையானாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Tags : Chennai ,Ooty ,Ooty, Nilgiris district ,Tamil Nadu ,
× RELATED ரூ.1 லட்சம் லஞ்சம் அறநிலையத்துறை இணை ஆணையர், புரோக்கர் கைது