வேலூர்: காட்பாடி காந்திநகரில் உள்ள வேலூர் மண்டல அலுவலகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு உள் தணிக்கை நடந்துள்ளது. அப்போது, வங்கியில் அடமானம் வைக்கப்பட்ட நகைகள் போலியானது என்று தெரியவந்தது. சுமார் ரூ.3.50 கோடி மதிப்பிலான போலி நகைகளை வைத்து வங்கியில் மோசடி நடந்து இருப்பது தணிக்கையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து கூட்டுறவு துறை உயர் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அந்த வங்கியில் பணியாற்றிய அலுவலர்கள் 2 பேர் போலி நகைகளை கடந்த 6 மாதங்களாக சிறிது, சிறிதாக வைத்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து மோசடியில் ஈடுபட்ட 2 அலுவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அதற்கு பதிலாக வெளி மாவட்டத்தில் பணியாற்றிய 2 பேர் தற்போது அந்த பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் கூட்டுறவு வங்கியில் பணியாற்றும் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதவிர மேலும் சில கூட்டுறவு வங்கியில், மோசடி நடைபெற்று உள்ளதா என அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
