×

நடுரோட்டிலே பயணிகளை ஏற்றி, இறக்கும் அவலம்: வடமதுரையில் நிரந்தர பஸ் ஸ்டாண்ட் அமைப்பது எப்போது?

 

வடமதுரை, ஜூலை 2: வடமதுரை நகர் திண்டுக்கல் மாநகரை அடுத்து அமைந்துள்ள பெரிய ஊராகும். திண்டுக்கல்லில் இருந்து 17 கிமீ தொலைவில் திருச்சி- திண்டுக்கல் நான்கு வழிச்சாலை அருகே அமைந்துள்ள இவ்வூரில் சுமார் 20 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். வடமதுரை நகரில் ஒரு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியும், ஒரு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியும், ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளியும் மற்றும் வடமதுரை அருகே ஒரு பொறியியல் கல்லூரியும் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவ- மாணவிகள் படிக்கின்றனர். இதுதவிர வடமதுரையில் ஒரு காவல் நிலையம், ஒரு மகளிர் காவல் நிலையமும் செயல்பட்டு வருகிறது.

மேலும் பத்திரப்பதிவு துறை அலுவலகமும், மின்சார வாரிய செயற்பொறியாளர் அலுவலகமும், தொடக்கக்கல்வி அலுவலகமும் செயல்பட்டு வருகின்றன. மேலும் வடமதுரையில் ஒரு அரசு மருத்துவமனை மற்றும் பல தனியார் மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. வடமதுரையை சுற்றியுள்ள சிங்காரக்கோட்டை, காணப்பாடி தென்னம்பட்டி, வேல்வார்கோட்டை, மோர்பட்டி, புத்தூர், பிலாத்து, சொல்லபட்டி, வெள்ளப்பொம்மன்பட்டி உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்தவர்களே மேற்கண்ட பள்ளிகள், காவல் நிலையங்கள், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகளுக்கு வந்து செல்கின்றனர். இவர்கள் அரசு பஸ்களில் வடமதுரை வந்து பஸ் நிறுத்தத்தில் இறங்கி சம்பந்தப்பட்ட இடங்களுக்கு செல்கின்றனர்.

இரவில் பைபாஸில் பறக்கும் பஸ்கள்
இதுதவிர வடமதுரையில் புகழ்பெற்ற சவுந்தரராஜ பெருமாள், மீனாட்சி சுந்தரேஸ்வரர் உள்ளிட்ட கோயில்கள் உள்ளன. இங்கும் விஷேச தினங்களில் பக்தர்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். மேலும் வடமதுரையில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை வாரச்சந்தை சநடக்கிறது. இந்த சந்தைக்கு வடமதுரையை சுற்றியுள்ள கிராம மக்கள் அதிகளவில் வந்து காய்கறிகள், பலசரக்கு சாமான்கள், துணிமணிகள் வாங்கி செல்வர். இவர்களின் பயணமும் பெரும்பாலும் அரசு பஸ்களாகத்தான் இருக்கின்றன. மேலும் மணப்பாறை மார்க்கத்தில் திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், அறந்தாங்கி தவிர திண்டுக்கல் மார்க்கத்தில் பழநி, கோவை, கரூர், பொள்ளாச்சி,

வத்தலக்குண்டு, பெரியகுளம், தேனி, போடி, கம்பம், குமுளி ஆகிய தொலைதூர ஊர்களுக்கு செல்லும் வடமதுரையை சுற்றியுள்ள சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பயணிகள் வடமதுரை வந்து பஸ் நிறுத்தத்தில் இறங்கி மேற்கண்ட ஊர்களுக்கு பயணிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த வடமதுரை நகரில் இதுவரை நிரந்தர பஸ் நிலையம் அமைக்கப்படவில்லை. இதனால் பெரும்பாலான வெளியூர் தொலைதூர பஸ்கள் பஸ் ஸ்டாண்ட் இல்லாத காரணத்தால் இரவு நேரங்களில் வடமதுரைக்குள் வராமல் பைபாஸில் சென்று விடுகின்றனர்.

வெயிலில் காய்ந்து மழையில் நனைந்து
இதனால் இரவு நேரங்களில் ஊருக்கு செல்ல முடியாமல் பயணிகள் பஸ்கள் வரும் இடங்களிலேயே கால்கடுக்க காத்திருக்க வேண்டியுள்ளது. மேலும் வடமதுரைக்குள் வரும் பேருந்துகளும் பஸ் ஸ்டாண்ட் இல்லாததால் பயணிகளை சாலையிலேயே நின்று ஏற்றி இறக்கி செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், பயணிகளும் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக பள்ளி நேரங்களான காலை மற்றும் மாலை நேரங்களில் 1000க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் ஒரே நேரத்தில் வடமதுரை பஸ் நிறுத்த பகுதி சாலை ஓரத்தில் நின்று பஸ் ஏற வேண்டிய நிலை பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது.

அப்படி மாணவர்கள் சாலை ஓரங்களில் பஸ்சிற்காக காத்திருக்கும் போது கடைக்காரர்கள் மாணவர்களை வியாபாரம் கெடுவதாக சொல்லி தள்ளி நிற்க சொல்கின்றனர். இதனால் மாணவர்களுக்கும், கடைக்காரர்களுக்கும் சில சமயங்களில் கைகலப்பு ஏற்படுகிறது. இதுதவிர வேடசந்தூர் மற்றும் திண்டுக்கல்லில் உள்ள கலை கல்லூரிகள், பாலிடெக்னிக் செல்லும் மேற்கண்ட கிராம பகுதிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் வடமதுரை வந்து பஸ் நிறுத்தம் சாலை ஓரத்தில் காத்திருந்து அதன்பின் பஸ் பிடித்து மேற்கண்ட ஊர்களுக்கு சென்று படித்து வருகின்றனர். இவர்கள் பஸ் ஸ்டாண்ட் இல்லாத காரணத்தால் சாலை ஓரத்தில் மழை மற்றும் வெயில் காலங்களில் நின்று பஸ் ஏறி செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.

Tags : Vadamadurai ,Dindigul ,Trichy-Dindugal ,highway ,Vadamadurai… ,
× RELATED தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.7.49...