சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் 3 மற்றும் 4ம் தேதிகளில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் என்று தலைமை கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அதிமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் வரும் 3ம் தேதி வெள்ளிக்கிழமை, 4ம் தேதி சனிக்கிழமை பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
அதன்படி வரும் 3ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு செங்கல்பட்டு கிழக்கு, காலை 11 மணிக்கு செங்கல்பட்டு மேற்கு மாவட்ட நிர்வாகிகள், மாலை 4.30 மணிக்கு வேலூர் மாநகர், புறநகர் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். 4ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு திருவண்ணாமலை வடக்கு, மத்தியம், காலை 11.30 மணிக்கு திருவண்ணாமலை தெற்கு, கிழக்கு மாவட்ட நிர்வாகிகள், மாலை 4.30 மணிக்கு அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களின் நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.
இந்த ஆலோசனை கூட்டங்களில், நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத் தேர்தல் முடிவுகள் குறித்தும், கழகத்தின் ஆக்கப்பூர்வமான வளர்ச்சிப் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. ஆகவே, சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய,
நகர, பேரூராட்சி செயலாளர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சார்பு அணிகளின் மாநில துணை நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றிய, நகர, பேரூராட்சி மன்ற தலைவர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
