முதுபெரும் கவிஞர் புவியரசு மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: முதுபெரும் கவிஞர் புவியரசு மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். வானம்பாடி கவிதை இயக்கத்தை தோற்றுவித்தவர்களில் முக்கியமானவர் மூத்த கவிஞர் புவியரசு; தனது வாழ்வே தமிழ் வாழ்வாக வாழ்ந்து மறைந்துள்ளார் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இரங்கல் செய்திக்குறிப்பில்;
வானம்பாடி கவிதை இயக்கத்தைத் தோற்றுவித்தவர்களில் முக்கியமானவரும் முதுபெரும் கவிஞருமான புவியரசு மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன். தமிழ்மீது கொண்ட பற்றின் காரணமாக ஜெகநாதன் என்ற தம் இயற்பெயரைப் புவியரசு என்று மாற்றிக் கொண்டவர். ஷேக்ஸ்பியர், கலில் கிப்ரான், உமர் கய்யாம், ஓஷோ, பியோதர் தஸ்தயேவ்ஸ்கி, ரவீந்திரநாத் தாகூர், காசி நஸ்ருல் இஸ்லாம் என உலகின் பெரும் கவிகள், எழுத்தாளர்களின் இறவாக் காவியங்களைத் தமிழில் ஆக்கியளித்துப் பங்காற்றியவர்.

இருமுறை சாகித்திய அகாதெமியின் விருதினையும், 2008-ஆம் ஆண்டுக்கான கலைஞர் பொற்கிழி விருதினையும் வென்றவர். தம் வாழ்வே தமிழ் வாழ்வாக வாழ்ந்து மறைந்துள்ளார் கவிஞர் புவியரசு அவர்கள். அன்னாரை இழந்து வாடும் தமிழ் கூறும் நல்லுலகத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். என கூறியுள்ளார்.

Related Stories: