புலிக்கு வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தை

கூடலூர்: தேயிலைத் தோட்டத்தில் திரிந்த புலியை பிடிக்க வனத்துறை வைத்த கூண்டில் சிறுத்தை சிக்கியது. இதனால், அப்பகுதி தொழிலாளர்கள் கொஞ்சம் நிம்மதி அடைந்தனர். கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம், குமுளி அடுத்த வண்டிப்பெரியாறு அருகே, கிரான்பி பகுதியில் தேயிலைத் தோட்டங்கள் அதிகளவில் உள்ளன. இப்பகுதியில் கடந்த 2 மாதமாக புலி ஒன்று வலம் வருகிறது. இதனால், அச்சமடைந்த தேயிலை தொழிலாளர்கள் புலியை பிடிக்க வனத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதையேற்று வண்டிப்பெரியாறு சுற்றுவட்டார தேயிலை தோட்டப்பகுதிகளில் புலியை பிடிக்க 3 கூண்டுகளை வனத்துறையினர் வைத்துள்ளனர். இந்த நிலையில், கிரான்பி பகுதியில் சிறுத்தை ஒன்றும் நடமாடுவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனால், வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். நேற்று காலை புலிக்கு வைத்த கூண்டில் ஆண் சிறுத்தை சிக்கியது. இதனால், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கொஞ்சம் நிம்மதி அடைந்துள்ளனர். இதேபோல, புலியையும் பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து கோட்டயம் வனக்கோட்ட அலுவலர் பிரஃபுல் அகர்வால் கூறியதாவது: கூண்டில் சிக்கிய சிறுத்தை, பெரியாறு புலிகள் காப்பக அடர் வனப்பகுதியில் விடப்படும்.

தேயிலை தோட்டங்களில் திரியும் புலியை பிடிக்க நடவடிக்கை தொடர்கிறது. ஐந்து வயதுடைய இந்த புலி, கடந்த ஏப்.2ல் மூணாறில் பிடிக்கப்பட்டு, பெரியாறு புலிகள் காப்பக அடர் வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் இறுதி முதல் வண்டிப்பெரியாறு தேயிலைத் தோட்டங்களில் புலி வலம் வருகிறது. இப்பகுதியில் பராமரிப்பில்லாத தேயிலைத் தோட்டங்கள் அடர்ந்த புதர்களாக உள்ளன. இதனால், புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் மறைவதற்கு வசதியாக உள்ளது. மேலும், இப்பகுதியில் கால்நடைகள் அதிகமாக இருப்பதும் புலி, சிறுத்தை வருவதற்கு ஏதுவாக உள்ளது என்றார்.

Related Stories: