* இந்த போட்டியில் கனடா தரப்பில் 8 ஷாட்களும், தென் ஆப்ரிக்கா தரப்பில் 3 ஷாட்களும் அடிக்கப்பட்டன.
* அவற்றில் கனடாவின் 4 ஷாட்கள் இலக்கை நோக்கி இருந்த நிலையில், தென் ஆப்ரிக்காவின் ஒரு ஷாட் மட்டுமே கோல் நோக்கிப் பாய்ந்தது. கனடா அணி 46 சதவீத நேரமும், தென் ஆப்ரிக்கா 47 சதவீத நேரமும் பந்தை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தன.
லாஸ் ஏஞ்சல்ஸ்: பிபா உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடரின் ரவுண்ட் ஆப் 32 சுற்றில், தென் ஆப்ரிக்காவுடன் மோதிய கனடா கடைசி நிமிடத்தில் கோல் அடித்து கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.அமெரிக்கா, மெக்சிகோ, கனடா இணைந்து நடத்தும் நடப்பு உலக கோப்பை தொடரில் பரபரப்பான நாக்-அவுட் சுற்று தொடங்கியுள்ளது. லீக் சுற்றில் மொத்தம் 48 அணிகள் 12 பிரிவுகளாக மோதியதில், ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடித்த அணிகளும், 3வது இடம் பிடித்த 12 அணிகளில் டாப் 8 அணிகளும் ரவுண்ட் ஆப் 32 சுற்றுக்கு தகுதி பெற்றன. உலக கோப்பையில் இந்த சுற்று நடப்பது இதுவே முதல் முறையாகும்.
நாக்-அவுட் சுற்றின் முதல் போட்டியாக லாஸ் ஏஞ்சல்ஸ் ஸ்டேடியத்தில் கனடா தென் ஆப்ரிக்கா மோதின. இரு அணிகளும் தற்காப்பு ஆட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தி சிறப்பாக செயல்பட்டதால் இடைவேளை வரை 0-0 என சமநிலை நிலவியது. குறிப்பாக, கனடா அணியின் பல கோல் முயற்சிகளை தென் ஆப்ரிக்கா வீரர்கள் துடிப்பாக செயல்பட்டு தடுத்தனர். இரண்டாவது பாதியிலும் இதே நிலை நீடித்தது. இரு அணிகளும் கடுமையாக முயற்சித்தும் கோல் ஏதும் விழாததால் ஆட்டம் கூடுதல் நேரத்தை நோக்கி செல்வதாகவே தோன்றியது.
எனினும் இன்ஜுரி டைம் வகையில் அளிக்கப்பட்ட 5 நிமிட த்தில் கனடா வீரர்கள் தாக்குதலை தீவிரப்படுத்தினர். இதன் பலனாக ஸ்டீபன் எஸ்டாகியோ (90’+2’) அபாரமாக கோல் அடிக்க, கனடா 1-0 என்ற கோல் கணக்கில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தய சுற்றுக்கு (ரவுண்ட் ஆப் 16) முன்னேறியது. கடைசி வரை போராடியும் கோல் அடிக்கும் முயற்சி கை கூடாததால் தென் ஆப்ரிக்கா ஏமாற்றத்துடன் வெளியேறியது.
