×

ரயில்வே துறையில் அதிகரிக்கும் காலிப் பணியிடங்களால் பணிகளில் பின்னடைவு: நடவடிக்கைக்கு எதிர்பார்ப்பு

 

திண்டுக்கல், ஜூன் 29: ரயில்வே துறையில் அதிகரிக்கும் காலிப் பணியிடங்களால் ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது. இதனால் பணிகளில் பெரும் பின்னடைவு ஏற்படுவதாக தொழிற்சங்கத்தினர் கூறுகின்றனர். இந்தியாவில் ரயில்களில் நாள்தோறும் லட்சக்கணக்கானோர் பயணம் செய்து வருகின்றனர். கட்டணம் குறைவு, அலுப்பில்லாத சொகுசு பயணம் ஆகியவை இதற்கு முக்கிய காரணம். ஆனால், ரயில்வே துறையில் காலி பணியிடங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் லோகோ பைலட் உள்ளிட்ட ஊழியர்கள் பணிச்சுமையால் பரிதவித்து வருகின்றனர்.
இதுகுறித்து தொழிற்சங்கத்தினர் கூறியதாவது: இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் ரயில் பயணங்கள் அதிகரித்து வருகிறது.

இதனால், ரயில் சேவைக்கான தேவையும் அதிகரித்து வருகிறது. ஆனால், முக்கிய பகுதிகளுக்கு கூட ரயில்களை இயக்க முடியாமல் நிர்வாகம் தவித்து வருகிறது. தென் மாவட்டங்களில் மதுரை மண்டலத்தில் இரட்டை பாதையாக மாற்றப்பட்டும் அதற்கேற்ப ரயில்கள் இயக்கப்படவில்லை. முன்பதிவு இல்லாத ரயில்களுக்கு பயணிகளிடம் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால், எந்த திட்டத்தையும் ஒன்றிய அரசு நிறைவேற்றவில்லை. மற்றொருபுறம் ரயில்வே துறையில் அதிகரிக்கும் காலி பணியிடங்களால் ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது. இதனால் பணிகளில் தொய்வு ஏற்படுகிறது. குறிப்பாக, தொழிலாளர்கள் பிரிவில் காலி பணியிடங்கள் தொடர்கிறது.

இதனால் லோகோ பைலட் உள்ளிட்டோரை அதிக நேரம் வேலை வாங்கும் போக்கு அதிகரித்து வருகிறது. மேலும், ரயில்வேயில் பல ஆண்டுகளாக பணி மாறுதல் வேண்டி காத்திருக்கும் நிலையை கண்டித்து தொடர் போராட்டங்கள் நடத்தவும் முடிவு செய்துள்ளோம். இவ்வாறு தெரிவித்தனர்.
இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், `தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் ரயில்வே துறையில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது, இந்த பிரச்னை குறித்து ரயில்வே வாரியத்திற்கு தெரிவித்து வருகிறோம். அவ்வப்போது குறைந்த எண்ணிக்கையில் காலிப்பணியிடங்களை நிரப்பி வருகின்றனர். இருப்பினும் தற்போது இருக்கும் காலி பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும் என்று தொடர்ந்து வலியுத்தி வருகிறோம்’ என்றார்.

 

Tags : Dindigul ,India ,
× RELATED கரூர் பகுதியில் கண்களை பதம்பார்க்கும் காற்று