×

நிலக்கோட்டை அருகே 30 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: ரூ.2.75 லட்சம் அபராதம்

 

திண்டுக்கல், ஜூன் 29: நிலக்கோட்டை அருகே 30 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த உணவுப்பொருள் பாதுகாப்புத்துறையினர், கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.2.75 லட்சம் அபராதம் விதித்தனர். நிலக்கோட்டை பகுதிகளில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக, உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் சரண்யா, உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வம் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு பணிகளை மேற்கொள்ள முடிவு ெசய்தனர். இதன்படி நிலக்கோட்டை, பள்ளப்பட்டி, கொடைரோடு, அம்மையநாயக்கனூர், நாகையா கவுண்டன்பட்டி மற்றும் இவற்றின் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாரிகள் கடைகளில் தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது நாகையா கவுண்டன்பட்டிஇ பள்ளப்பட்டி உள்ளிட்ட இடங்களில் கடைகளில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 30 கிலோ புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக நாகையா கவுண்டன்பட்டி பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் (51), பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் (40) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் நிலக்கோட்டை, பள்ளப்பட்டி, கொடைரோடு, அம்மையநாயக்கனூர், சின்னாளப்பட்டி, நாகையா கவுண்டன்பட்டி ஆகிய பகுதிகளில் 7 கடைகளில் இருந்தும் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் முடிவில், புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த 4 கடைகளுக்கு தலா ரூ.50 ஆயிரம், 3 கடைகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் என, மொத்தம் ரூ.2.75 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்த கடைகளுக்கு, அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Tags : Nilakottai ,Dindigul ,Food Safety Department ,
× RELATED கரூர் பகுதியில் கண்களை பதம்பார்க்கும் காற்று