புதுடெல்லி: எஸ்ஐஆரின் போது வாக்காளர் பட்டியலில் இருந்து தனது பெயர் நீக்கப்பட்டதால் பாஸ்போர்ட் புதுப்பிக்க முடியாமல் இருப்பதால் ஆங்கில பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் ஆர்.ராஜகோபால் கூறியதைத் தொடர்ந்து, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிய அரசை கடுமையாக விமர்சித்துள்ளன. மேற்கு வங்கத்தை சேர்ந்த ஆர்.ராஜகோபால் ‘தி டெலிகிராப்’ எனும் பிரபல ஆங்கில பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர்.
மேற்கு வங்கத்தை சேர்ந்த இவர் வெளியிட்ட குறிப்பில் கூறியிருப்பதாவது: மேற்கு வங்கத்தில் சுமார் 27 லட்சம் மக்களைப் போல நானும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கையினால் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டேன். எனது 10ம் வகுப்பு சான்றிதழை சமர்பித்த பிறகும் என் பெயர் நீக்கத்திற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் அமைச்கப்பட்ட தீர்ப்பாயங்களில் ஒன்றில் எனது மேல்முறையீடு நிலுவையில் உள்ளது.
இதன் காரணமாக என்னால் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க முடியவில்லை. கடந்த மார்ச் 19ம் தேதி பயோமெட்ரிக் நடைமுறைகளை முடித்த நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் காவல்துறை சரிபார்ப்பு இன்னும் முடிக்கப்படவில்லை. மூத்த பத்திரிகையாளரான எனக்கே இந்த நிலைமை என்றால், விளிம்புநிலை மக்கள் இன்னும் என்னவெல்லாம் சிரமத்தை எதிர்கொள்வார்களோ? இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
இந்த விவகாரம் கடும் அரசியல் எதிர்வினைகளை ஏற்படுத்தி உள்ளது. நாடு எந்தளவுக்கு அறிவுக்கு பொருந்தாத நிலையை எட்டியுள்ளது என்பதை இந்த சம்பவம் பிரதிபலிப்பதாக காங்கிரஸ் எம்பி விவேக் தங்கா கூறி உள்ளார். ராஜகோபாலும் நடந்த சம்பவம் அதிர்ச்சியளிக்கும் மற்றும் மனதை உலுக்கும் நிகழ்வு என திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சாகரிகா கோஷ் கூறி உள்ளார். பாஜவின் பிளவுபடுத்தும் இந்துத்துவா செயல்திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், மக்களின் வாக்குரிமையை பறிக்கவும் குடியுரிமையை நிர்ணயிக்கவும் எஸ்ஐஆர் பயன்படுத்தப்படுவதாக மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி குற்றம்சாட்டி உள்ளார்.
