மும்பை: மும்பையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஷியா சமூகத்தினரின் மொகரம் ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்துக் கொண்டனர். ஊர்வலத்தில் ஒரு நபர், ‘வலி நிவாரணி’ எனக்கூறி ஒரு மாத்திரையை இலவசமாக விநியோகித்து வந்துள்ளார். அதனை வாங்கி உட்கொண்ட ஒருவருக்கு வாந்தி மற்றும் கடுமையான வயிற்று வலி ஏற்படவே, மருத்துவமனையில் இந்த விவகாரத்தை கூறியிருக்கிறார்.
சந்தேகமடைந்த டாக்டர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்து, மாத்திரையை விநியோகித்து வந்த புனேவைச் சேர்ந்த பிபிஏ பட்டதாரியான பயாஸ் நிசார் பிரேம்ஜி(39) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து சுமார் 14,000 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை ஆய்வு செய்ததில் எலி மருந்தில் பயன்படுத்தப்படும் ‘ஜிங்க் பாஸ்பைடு’ அந்த மாத்திரைகளில் கலந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதிர்ச்சியடைந்த போலீசார் பயாஸ் நிசார் பிரேம்ஜியிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது அவர், மொகரம் ஊர்வலத்தில் கலந்துக் கொண்டவர்களை கொலை செய்வதற்காக மாத்திரைகளை வழங்கியதாக கூறியுள்ளார். ஆன்லைன் மூலமாக சுமார் 30 ஆயிரம் காலி மாத்திரை குப்பிகள் மற்றும் 50 கிலோ ஜிங்க் பாஸ்பைட்டை வாங்கியுள்ளார்.
பின்னர் மாத்திரைகளில் ஜிங்க் பாஸ்பைடை நிரப்பி மொகரம் ஊர்வலத்தில் விநியோகித்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. கடந்த 2019ம் ஆண்டு முதல் ஈரான், ஈராக்கிற்கு பலமுறை பயாஸ் நிசார் பிரேம்ஜி சென்றுவந்ததும் தெரியவந்துள்ள நிலையில், இதன் பின்னணி பயங்கரவாத கும்பல் உள்ளதா? என விசாரணை நடக்கிறது.
