ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே மலைப்பகுதியில் ராணுவ மோட்டார் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க பொதுமக்களுக்கு தடை விதித்துள்ள போலீசார், 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அடுத்த வெள்ளக்குளம் கிராமத்தில் உள்ள வரதேசி மலை அடிவார பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் கடந்த 19ம்தேதி மாலை வீட்டின் பின்புறம் உள்ள மலைப்பகுதிக்கு சென்றார். அப்போது மண்ணில் பாதி புதைந்த நிலையில் ராக்கெட் போன்ற வடிவில் ஒரு பொருள் கிடந்துள்ளது. இதைகண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக அங்குள்ள ஓய்வு பெற்ற ராணுவ வீரரிடம் தெரிவித்தார். அவர் வந்து பார்த்தபோது, அந்த பொருள் வெடிக்காத நிலையில் உள்ள ராணுவ மோட்டார் வெடிகுண்டு என தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த திமிரி போலீசார், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சென்று ஆய்வு செய்தனர். இதுதொடர்பான விசாரணையில் ராணுவத்தில், எதிரிகளை முன்னேற விடாமல் இருப்பதற்கு ராணுவ வீரர்கள் பயன்படுத்தும் மோட்டார் வகை வெடிகுண்டு. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு ராணுவ வீரர்கள் சிறிய அளவிலான பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அவர்கள் பயன்படுத்தியது வெடிக்காமல் இருந்திருக்கலாம். இவற்றை பதுங்கு குழிகளில் மட்டுமே அழிக்க முடியும் என தெரியவந்தது. இதுகுறித்து சென்னையில் உள்ள ராணுவ அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். ராணுவ அதிகாரிகள் வந்தபிறகு இந்த மோட்டார் குண்டு பாதுகாப்பாக அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே பாதுகாப்பு கருதி பொதுமக்கள் யாரும் அந்த பகுதிக்கு செல்லக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
