கூடலூர்: கேரளம் மாநிலம், இடுக்கி மாவட்டம், குமுளி அருகே, தேக்கடியில் பெரியார் புலிகள் சரணாலயம் அமைந்துள்ளது. இதன் நுழைவு வாயிலாக குமுளி நகரம் அமைந்துள்ளது. இந்த நகரில் செயல்படும் வணிக நிறுவனங்களின் விவரங்களை வனத்துறை அதிகாரிகள் கோரியுள்ளனர். இதையடுத்து கிரீன் செக் போஸ்ட்டுகளை அமைக்க முடிவு எடுக்கப்பட்டதாக ஊராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஊராட்சி தலைவர் எம்.எம்.வர்கீஸ் கூறுகையில், ‘குமுளியில் வண்டன்மேடு சந்திப்பு மற்றும் தேக்கடி சாலை ஆகிய இரண்டு இடங்களில் கிரீன் செக் போஸ்ட்கள் அமைத்து சுற்றுலா வாகனங்களிடமிருந்து கட்டணம் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து குமுளி ஊராட்சி குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, ஒப்புதல் பெற்று நடைமுறைப்படுத்தப்படும். தற்போது தேக்கடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடமிருந்து பெரியார் புலிகள் சரணாலய நிர்வாகம் வருவாய் பெறுகிறது. ஆனால், சுற்றுலாத்துறையால் உருவாகும் பெருமளவு கழிவுகளை நிர்வகிக்கும் பொறுப்பு மட்டும் குமுளி ஊராட்சிக்கு உள்ளது. சுற்றுலாப் பயணிகளிடமிருந்து எங்களுக்கு எந்தவித வருமானமும் கிடைப்பதில்லை. கழிவு மேலாண்மை மிகப்பெரிய சவாலாக உள்ளது. பெரியார் புலிகள் காப்பக உதவி களஇயக்குநர் அண்மையில் குமுளி ஊராட்சி செயலருக்கு கடிதம் அனுப்பி, ஊராட்சி எல்லைக்குள் செயல்படும் நிறுவனங்களின் விவரங்களை கேட்டுள்ளார்.
ஊராட்சி இயக்குநர் அல்லது அரசின் அனுமதியின்றி, உள்ளாட்சி அமைப்பின் கீழ் செயல்படும் நிறுவனங்களின் விவரங்களை நேரடியாக கோர வனத்துறைக்கு அதிகாரம் இல்லை. எனவே, அந்தக் கோரிக்கைக்கு இணங்க முடியாது என்று பதில் அளித்துள்ளோம். தேக்கடியில் உள்ள ஆனவச்சால் வாகன நிறுத்துமிடம் சுற்றுலாத்துறை நிதியில் அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது அங்கு பிற வாகனங்கள் நிறுத்தப்படுவதற்கு வனத்துறை அனுமதி வழங்கவில்லை’ என்றார். பெரியார் புலிகள் காப்பக உதவி களஇயக்குநர் ஆர்.லட்சுமி கூறுகையில், ‘குமுளி நகரில் உள்ள நிறுவனங்களும் பெரியார் புலிகள் சரணாலயத்தின் பங்குதாரர்களே.
இந்த பங்குதாரர்களின் கூட்டம் 5 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றது. தற்போது புதிய கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில், பங்கேற்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை உள்ளிட்ட தகவல்களை அறிய, குமுளி ஊராட்சியிடம் பட்டியல் கேட்டோம். ஊராட்சி எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, தகவல் கோரப்பட்டதற்கான காரணத்தை விளக்க, மேலும் ஒரு கடிதம் அனுப்பியுள்ளேன். இந்த விவகாரத்தில் எந்த சர்ச்சையும் இல்லை. சிலர் வனத்துறைக்கு எதிராக பொதுமக்களின் உணர்வுகளைத் தூண்ட முயற்சிக்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
