×

தொல் தமிழர்களின் வாழ்வியல் எச்சங்கள் நிறைந்து காணப்படும் கம்பம் பள்ளத்தாக்கு: கள ஆய்வு செய்து பாதுகாக்க கோரிக்கை

 

 

மதுரை: தொல் தமிழர்களின் வாழ்வியல் எச்சங்கள் நிறைந்து காணப்படும் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியை கள ஆய்வு செய்து பாதுகாக்க வேண்டும் என தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உலகத்தில் விளைநிலங்கள் உருவான காலத்திலேயே ஆற்றுப்போக்குகளும் உருவாகி இருக்கும். இதன்படி, தேனி மாவட்டத்தில் கம்பம் பள்ளத்தாக்கில் காணப்படும் முதன்மையான நதியாக ‘பேரியாறு’ எனப்படும் ‘பெரியாறு’ திகழ்கிறது. இப்பெரியாற்று நதிக்கரையில் தொல் தமிழர்களின் வாழ்வியல் எச்சங்கள் காணப்படுகின்றன. ‘பேரியாற்று நாகரிகம்’ என்னும் பெயரில் நாகரிகம் இல்லாவிட்டாலும், நதியின் வளமான நீரும், போக்குவரத்து வசதியும், பண்டைக் காலங்களிலிருந்து மனித குடியிருப்புகள் உருவாகவும், சமூகம், பொருளாதாரம் வளரவும் உதவியுள்ளது.

இந்த ஆற்றுப்பகுதியில் காணப்படும் பாறை ஓவியங்கள், குகை வாழிடங்கள் துவங்கி, அவர்கள் பயன்படுத்திய மட்பாண்டங்கள் வரை கம்பம் பள்ளத்தாக்கில் மிகப்பெரிய நாகரிகம் இருந்ததற்கான ஆதாரமாக திகழ்கிறது. இது குறித்து ஆய்வு செய்து வரும் தேனி மாவட்டம், உத்தமபாளையம் கல்லூரி பேராசிரியர் மு.அப்துல் காதர் கூறியதாவது: தேனி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் ஓரிடத்தில் பிரிந்து வருஷநாட்டு மலைக்குன்றுகளின் இடைப்பட்ட பள்ளத்தாக்குப் பகுதியான கம்பம் பள்ளத்தாக்கில் தொல் தமிழர்கள் அதிகளவில் வசித்ததற்கான எச்சங்கள் உள்ளன. இப்பகுதி பாலார்பட்டி மேற்கில் மலைக்குன்றிலும், அருகாமை மல்லிங்கர்சாமி மலையிலும் பாறை ஓவியங்கள், கல்படுக்கைகள் காணப்படுகின்றன.

போடி அருகே சோலையூர், எரசக்கநாயக்கனூர் அருகில் உள்ள பெருமாள் சுனைப்பகுதி, கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டி சங்கிலிக்கரடு மலைப்பகுதி, மூணாண்டிபட்டி ஆகிய பகுதிகளில் பாறை ஓவியங்களைப் பார்க்கலாம். வருசநாடு-முருக்கோடை இடையே வைகை ஆற்றங்கரையோரத்து மலைக்குகையில் கண்டறிந்த ஓவியங்கள், வைகைநதி நாகரிகத்தின் ஒரு பகுதியாகக் கொள்ளலாம். உத்தமபாளையம் அருகே முல்லைப்பெரியாற்றங்கரையின் எல்லப்பட்டி அகழாய்வில் இரும்பு உருக்கும் தொழிற்சாலை, முதுமக்கள் தாழி, மட்பாண்டங்கள், தேநீர் கோப்பை ஆகியவை கண்டறியப்பட்டுள்ளது. குள்ளப்பகவுண்டன்பட்டி, கோம்பை, கூடலூர், எரசக்கநாயக்கனூர், சீலையம்பட்டியில் முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன. கூடலூர் பகுதிகளில் பழைய கற்கால கைக்கோடாரிகள், வெட்டுக்கருவிகள் கிடைத்துள்ளன.

கம்பம் அருகே ஏகலூத்து பகுதியில் 2,500 ஆண்டுக்கு முற்பட்ட கற்சின்னத்தை கிராமத்தினர் ‘கன்னிமார்’ பெயரில் வழிபடுகின்றனர். உத்தமபுரத்தில் ரோமானிய நாணயங்கள், கல்மணி கிடைத்துள்ளன. சின்னமனூர் அருகே நத்தத்து மேடையில் தாழிகள், கருப்புசிவப்பு மண்பானை ஓடுகள், இரும்பு உருக்கும் குழாய்கள், குள்ளப்பகவுண்டன்பட்டியில் ஈமக்காடு, முதுமக்கள் தாழி, உருக்கி இரும்பைப் பிரித்தெடுத்தற்கான எச்சங்கள் என ஏகப்பட்ட தொல்லியல் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. மேலச்சிந்தலைச்சேரியில் கற்காலக் கருவிகளும், தேவாரத்தில் கிமு ஆயிரம் வருடங்கள் முந்திய முதுமக்கள் தாழி, கோகிலாபுரம் அருகே ஆதிமனிதன் வாழ்ந்த குகை தளம், சுக்காங்கல்பட்டியில் இரும்பு உருக்கும் பட்டறை, சிலமலையில் புதிய கற்காலக் கோடாரித் தலை கிடைத்திருக்கிறது.

இவ்வரிசையில் கம்பம் பள்ளத்தாக்கின் டொம்புச்சேரியில், சங்ககால வாழ்விடப்பகுதிகளாக புதைகாடு, சாம்பல் மேடு, மேட்டுக்காடு பெயரில் இடங்கள், தட்டுகள், கிண்ணம், சுடுமண்பொம்மைகள், சுடுமண் காதணிகள் கிடைத்துள்ளன. சின்னமனூர், உத்தமபாளையம், போடியைச் சுற்றிய மலைப்பகுதிகளில் பெருமளவில் கல்திட்டைகள் கிடைத்து வருகின்றன. மொத்தத்தில் தேனி மாவட்டத்தின் இப்பகுதியில் ‘கம்பம் பள்ளத்தாக்கும் பெரியாற்று நாகரிகமும்’ தலைப்பில் சிறப்பு நடவடிக்கையாக அரசு களஆய்வுகள் மேற்கொண்டால் பலதரப்பட்ட தொன்மை வரலாற்று அதிசயங்களை கண்டுபிடிக்கலாம். இப்பகுதி பாதுகாக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Kambam Valley ,Madurai ,
× RELATED பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி கோரி...