வாணியம்பாடி: வாணியம்பாடி புத்துக்கோயில் கருவறையில் முதல்வர் விஜய் படம் வைத்து பூஜை செய்த தவெகவினர், இதை இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிட்டனர். இது பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளை அக்கட்சியினர் கொண்டாடினர். நேற்று முன்தினம் திருப்பத்தூர் மாவட்ட தவெக நிர்வாகிகள், அக்கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளரான முனிசாமி தலைமையில், வாணியம்பாடி அருகே உள்ள பிரசித்தி பெற்ற புத்து மாரியம்மன் கோயிலில் வழிபாடு நடத்தினர்.
அப்போது மாவட்ட செயலாளர் முனிசாமி கையில், விஜய் படத்துடன் கோயிலின் கருவறையான தெய்வீக சக்தி வாய்ந்த சுயம்பு புற்றை சுற்றி வந்தனர். பின்னர் விஜய்யின் படத்தை கருவறையில் வைத்து சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை செய்யப்பட்டது. இந்த காட்சிகளை செல்போனில் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட்டுள்ளனர். இதனை பார்த்த பக்தர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். கோயில் கருவறைக்குள் தவெகவினர் அத்துமீறிய செயல்களுக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இந்த கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
