×

வாலாஜா, ஆற்காடு ஊராட்சி ஒன்றியங்களில் ஆய்வு மழைக்காலம் தொடங்கும் முன்பு காஞ்சனகிரி ஓடைகால்வாயில் தூர்வார நடவடிக்கை

*அதிகாரிகளுக்கு கலெக்டர் ப்ரியா உத்தரவு

வாலாஜா : மழைக்காலம் தொடங்கும் முன்பு காஞ்சனகிரி ஓடைகால்வாயில் தூர்வார நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வாலாஜா ஊராட்சி ஒன்றியத்தில் ஆய்வுசெய்த கலெக்டர் ப்ரியா தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நிலுவையில் உள்ள வளர்ச்சி பணிகள் நடந்து வருகிறது. ‌இந்த பணிகளை கலெக்டர் ப்ரியா நேற்று ஆய்வு செய்தார். அப்போது மருதம்பாக்கம் ஊராட்சியில் உள்ள நாற்றங்கால் பண்ணையில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்படுவதை ஆய்வு செய்தார்.

அங்கு உற்பத்தி செய்யப்படும் மரங்கள் குறித்தும், எந்தெந்த இடங்களில் நடப்பட்டுள்ளது குறித்தும் கேட்டறிந்தார். தொடர்ந்து லாலாப்பேட்டை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் காஞ்சனகிரி ஓடைக்கால்வாய் தூர்வாரும் பணியை ஆய்வு செய்தார்.

அப்போது மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாக தூர்வாரும் பணிகளை முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதேபோல் முகுந்தராயபுரம் ஊராட்சியில் ரூ.24.95 லட்சத்தில் குளம் வெட்டும் பணிகள், பின்னர், மரக்கன்றுகள் பராமரிக்கப்படுவதையும், நெல்லிக்குப்பம் மோட்டூர் பகுதியில் குப்பை தரம் பிரிக்கும் மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது திட்ட இயக்குநர் ஊரக செல்வராசு, வாலாஜா பிடிஓக்கள், சிவகுமார், பிரபாகரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் லோகநாதன், கோகுலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் ஆற்காடு ஊராட்சி ஒன்றியம் ஆயிலம் ஊராட்சியில் கனிமம் மற்றும் சுரங்கம் திட்டத்தின் கீழ் ரூ.17.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை கலெக்டர் ந.ப்ரியா நேற்று நேரில் சென்று பார்வையிட்டு அந்த கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ள அடிப்படை வசதிகள், சமையலறை, கழிவறை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து புதிய கட்டிடத்தை திறந்து வைப்பதற்கான பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

அதனை தொடர்ந்து ஆயிலம் கால்நடை மருந்தகத்தை பார்வையிட்டு அந்த மருந்தகத்தில் கால்நடைகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள், மருந்து இருப்பு குறித்து கேட்டறிந்து, பராமரிக்கப்படும் பதிவேடுகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து ஆயிலம் ஊராட்சி சுடுகாட்டுச் சாலையில் கனிமம் மற்றும் சுரங்கம் திட்டத்தில் ரூ 8.94 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கல்வெட்டினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கு.செல்வராசு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, சரவணன், கால்நடை உதவி மருத்துவர் வேல்முருகன், ஊராட்சி மன்ற தலைவர் பிரபாவதி ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மாணவர்களின் கற்றல் திறன் ஆய்வு

வாலாஜா ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நெல்லிக்குப்பம் மோட்டூர் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் ப்ரியா ஆய்வு செய்தார். அப்போது குழந்தைகளின் கற்றல் திறன், வருகை பதிவேடு, உணவுப் பொருட்கள் இருப்பளவு குழந்தைகளின் எடை உயரம், சமையலறை மற்றும் கழிவறையின் சுகாதாரம் உள்ளிட்டவற்றை கேட்டறிந்தார். பின்னர் ஆற்காடு ஆயிலம் ஊராட்சி அரசினர் உயர்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளின் கற்றல் திறன் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து ஆயிலம் ஊராட்சி அங்கன்வாடி மையம் மற்றும் கீழ்குப்பம் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் வருகை பதிவேடு, குழந்தைகளின் எடை, உயரம், உணவுப் பொருட்கள் இருப்பு, பதிவேடுகள், சமையலறை மற்றும் கழிவறை உள்ளிட்டவற்றை கலெக்டர் ஆய்வு செய்து குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.

Tags : Wallaja ,Arcot Panchayat Unions ,Kanchanagiri Odai Canal ,Collector ,Priya ,Wallaja Panchayat Union ,Ranipet district ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு நீண்ட காலம் மூடி...