×

அமோனியா வாயு கசிவு இடைக்கால அறிக்கை முதல்வரிடம் சமர்ப்பிப்பு: முழுமையான அறிக்கை இரு நாளில் வெளியாக வாய்ப்பு

சென்னை: திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியில் செயல்பட்டு வந்த இறால் பண்ணையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவால் 9 பேர் உயிரிழந்தனர். 60க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதுகாப்பு நடைமுறைகளில் ஏற்பட்ட குறைபாடுகள் குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு மூன்று பேர் கொண்ட உயர்மட்ட குழுவை அமைத்தது.

இந்த குழுவில் சுகாதாரத் துறை இயக்குநர், தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரிய இயக்குநர் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளின் மூத்த அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். சம்பவம் தொடர்பாக 24 மணி நேரத்திற்குள் முதற்கட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய முதல்வர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, மூவர் குழுவினர் தங்களின் இடைக்கால விசாரணை அறிக்கையை முதலமைச்சரிடம் நேற்று சமர்ப்பித்துள்ளனர்.

அறிக்கையில், அமோனியா வாயு கசிவுக்கான ஆரம்பகட்ட காரணங்கள், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் நிலை, பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டதா என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விபத்து நடைபெற்ற இடத்தில் ஆய்வு மேற்கொண்டு சேகரிக்கப்பட்ட தொழில்நுட்ப தகவல்கள் மற்றும் சாட்சியங்களும் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், சம்பவத்தின் முழுமையான பின்னணி, பொறுப்புக்கூற வேண்டிய நபர்கள் மற்றும் நிறுவனங்கள், எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகளை தடுக்க பரிந்துரைக்கப்படும் நடவடிக்கைகள் உள்ளிட்ட விவரங்களுடன் கூடிய விரிவான இறுதி அறிக்கை இன்னும் இரண்டு நாட்களுக்குள் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Chief Minister ,Chennai ,Periyapalayam ,Tiruvallur district ,Tamil Nadu government ,
× RELATED தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டு நிதி பெற புதிய கெடுபிடி