×

அரசின் திட்டப்பகுதிகளில் ரூ.45 கோடி முதலீடு 168 ஏக்கர் இடத்தை வாங்கிய மபி பாஜ முதல்வர் குடும்பம்: சர்ச்சை வெடித்தது

போபால்: மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவின் குடும்பத்தினர் உஜ்ஜைன் நகரில் 45 கோடி ரூபாய் மதிப்பில் நிலங்களை வாங்கியுள்ள விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையிலான பாஜ ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, உஜ்ஜைன் நகரை மையமாக வைத்து பிரம்மாண்டமான உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் தொடங்கப்பட்டன.

புதிய சாலைகள், நெடுஞ்சாலைகள் அமைத்தல் மற்றும் குடியிருப்பு மற்றும் வணிக இடங்களின் விரிவாக்கத்திற்காக நிலப் பயன்பாட்டில் மாற்றங்கள் செய்வது உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இந்த மாற்றங்களால் உஜ்ஜைன் நகரம் இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க ரியல் எஸ்டேட் சந்தைகளில் ஒன்றாக மாறியது. இத்தகைய சூழலில், அரசு திட்டங்கள் அறிவிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வர் மோகன் யாதவின் குடும்பத்தினர் முன்கூட்டியே அதிக அளவிலான நிலங்களை வாங்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபல ஆங்கில பத்திரிகை நடத்திய ஆய்வில், முதல்வர் மோகன் யாதவ் கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி பதவியேற்ற பிறகு, அவரது குடும்பத்தினர் மற்றும் அவர்களுக்குச் சொந்தமான ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் சார்பில் உஜ்ஜைனில் நிலங்கள் வாங்கப்பட்டது தெரியவந்துள்ளது. குறிப்பாக, சாலை திட்டங்கள் மற்றும் நிலப் பயன்பாட்டு மாற்றங்களால் அதிக லாபம் ஈட்டக்கூடிய பகுதிகளில், இதுவரை சுமார் 45 கோடி ரூபாய் மதிப்பிலான 137 பிளாட்டுகள் வாங்கப்பட்டுள்ளன. இவை மொத்தம் 168 ஏக்கர் பரப்பளவைக் கொண்டவை.

இதில் முதல்வரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் உடன்பிறந்தவர்கள் முதலீடு செய்துள்ளனர். அரசு தனது திட்டங்களை அமல்படுத்தும் இடங்களை குறிவைத்து, இத்தகைய பெரிய அளவிலான நிலங்கள் வாங்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. நிலப்பதிவு ஆவணங்களின்படி, முதல்வர் பதவியேற்ற இரண்டு ஆண்டுகளுக்குள் இந்த பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. இவ்விவகாரம் மத்திய பிரதேச அரசியலில் பூதாகரமாக வெடித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

* முதல்வர் பதவி விலக வேண்டும் காங்கிரஸ் வலியுறுத்தல்
உஜ்ஜைனில் நடைபெற்றதாகக் கூறப்படும் நில மோசடிக்கு பொறுப்பு ஏற்று முதல்வர் மோகன் யாதவ் பதவி விலக வேண்டும் என்றும், இந்த குற்றச்சாட்டுகள் குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் ஜிது பட்வாரி கூறுகையில்,’ இந்த நிலமோசடி வழக்கை உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய நீதிபதி ஒருவரைக் கொண்டு விசாரணை நடத்தப்பட வேண்டும். முதல்வர் பதவியேற்ற பிறகு அவரது குடும்பத்தினரின் நில உடைமை எவ்வாறு 100 ஏக்கரில் இருந்து 335 ஏக்கராக அதிகரித்தது என்பது குறித்து அவர் விளக்கம் அளிக்க வேண்டும்’ என்றார்.

Tags : BJP ,Chief Minister ,Bhopal ,Madhya Pradesh ,Mohan Yadav ,Ujjain ,BJP government ,
× RELATED 40 டிஎம்சி தண்ணீர் திறக்க...