புதுடெல்லி: வங்கதேச பிரதமரின் ஆலோசகர் ஜாஹெட் உர் ரஹ்மான் டெல்லி வந்த நிலையில் பாதுகாப்பு தொடர்பான கருப்புப்பட்டியலில் அவரது பெயர் இடம்பெற்றிருந்ததாக கருதப்பட்டதால் குடியேற்ற அதிகாரிகளால் அவர் சிறிது நேரம் தடுத்து நிறுத்தப்பட்டதை தொடர்ந்து இந்தியாவிற்கு வங்கதேசம் தனது எதிர்ப்பை பதிவு செய்திருந்தது.
இந்நிலையில் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வாராந்திர செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது, ”வங்கதேச பிரதமரின் ஆலோசகர் ஜாஹெட் உர் ரஹ்மான் , சார்க் விசா மற்றும் தனிப்பட்ட பாஸ்போர்ட் ஆகியவற்றுடன் கடந்த 14ம் தேதி டெல்லி வந்தார். டெல்லி விமான நிலையத்தில் குடியேற்ற அதிகாரிகளால் அவர் விசாரிக்கப்பட்டார்.
அவர், இந்திய பெருங்கடல் விளிம்பு சங்கத்தின் மூத்த அதிகாரிகள் குழுவின் 28வது கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்ததாக தெரிவித்தார். அந்த கூட்டத்தில் பங்கேற்பது அவரது வருகையின் நோக்கம் என்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்ட பின் அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. எனினும் அவர் தனது சொந்த விருப்பத்தின்பேரிலேயே டாக்கா திரும்பி செல்வதற்கு முடிவு செய்தார்” என்றார்.
