- பிரிக்
- இந்தியா
- புது தில்லி
- பிரேசில்
- ரஷ்யா
- சீனா
- தென் ஆப்பிரிக்கா
- தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மாநாடு
- தில்லி
புதுடெல்லி: இந்தியா, பிரேசில், ரஷ்யா, சீனா, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளை கொண்ட பிரிக்ஸ் அமைப்பிற்கு தற்போது இந்தியா தலைமை வகிக்கிறது. இதையொட்டி, பிரிக்ஸ் நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மாநாடு டெல்லியில் கடந்த 2 நாட்கள் நடந்தது. சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி. ரஷ்ய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் செர்ஜி ஷோய்கு, ஈரான் பாதுகாப்பு அதிகாரி காதிர் நெசாமிபூர் உள்ளிட்டோர் பங்கேற்ற மாநாட்டை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர், ‘‘உலகளாவிய ராணுவ மோதல்கள் மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைகள் நிலவும் இக்கட்டான சூழலில் இந்த மாநாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. உலகளாவிய அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் வேளையில், மோதல்களை தீர்ப்பதற்கான சர்வதேச அமைப்புகளும் நிறுவனங்களும் தற்போதைய சூழலில் போதுமானதாக இல்லை. பல்தரப்பு ஒத்துழைப்பு சரிவை சந்தித்து வருகிறது. இந்த சூழலில் உலகளாவிய பல்வேறு சவால்களை எதிர்கொள்வதில் பிரிக்ஸ் அமைப்பு முக்கிய பங்காற்ற வேண்டியுள்ளது. உலக அமைதிக்காக கூட்டமைப்பாக நாம் என்ன பங்காற்ற முடியும் என்பதை ஆழமாகச் சிந்திக்க வேண்டும்’’ என்றார்.
* பிரிக்ஸ் நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களுடன் மோடி சந்திப்பு
டெல்லி வந்துள்ள பிரிக்ஸ் நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களும் மூத்த பாதுகாப்பு அதிகாரிகளும் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்கள். அப்போது,’பிரிக்ஸ் அமைப்பிற்கான இந்தியாவின் தலைமைத்துவமானது நடைமுறை ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்லவும், ‘குளோபல் சவுத்’ (வளரும் நாடுகள்) நாடுகளின் முன்னுரிமைகளுக்கு ஆதரவளிக்கவும், பாதுகாப்பான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய உலகை உருவாக்கப் பங்களிக்கவும் முயலும் ’ என்று தெரிவித்தார்.
