×

மகளிர் உலக கோப்பை டி20 தென் ஆப்ரிக்கா அபார வெற்றி

மான்செஸ்டர்: ஐசிசி மகளிர் உலக கோப்பை டி20 போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்ரிக்கா மகளிர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெறிபெற்றது. ஓல்டு டிரஃபோர்டு மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பேட் செய்ய முடிவு செய்தார். தொடக்க வீராங்கனைகளாக ஸ்மிரிதி மந்தனா, ஷபாலி வர்மா களமிறங்கினர்.

மந்தனா 17 ரன் எடுத்து காப் பந்துவீச்சில் கிளீன் போல்டாக, ஷபாலி 31 ரன்னில் பெவிலியன் திரும்பினார். தென் ஆப்ரிக்க பவுலர்கள் துல்லியமாகப் பந்துவீசி நெருக்கடி கொடுக்க… யஸ்டிகா 15, ஜெமிமா 12 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர். ஓரளவு தாக்குப்பிடித்த ஹர்மன்பிரீத் 24, தீப்தி ஷர்மா 29 ரன் எடுக்க, ரிச்சா கோஷ் 15 ரன்னில் அவுட்டானார். இந்தியா 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 158 ரன் குவித்தது. அருந்ததி 6, பிரேமா 3 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

தென் ஆப்ரிக்கா பந்துவீச்சில் மரிஸன்னே காப், ஷப்னிம் இஸ்மாயில் தலா 2, நான்குலுலெகோ, அயபோங்கா, நடின் டி கிளார்க் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து களம் இறங்கிய தென் ஆப்ரிக்கா மகளிர் அணி 19.1 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணியை வீழ்த்தி தென் ஆப்ரிக்கா மகளிர் அணி வெற்றிபெற்றது.

Tags : Women's World Cup T20 ,South Africa ,Manchester ,South Africa Women's team ,India ,ICC Women's World Cup T20 ,Old Trafford ,Harmanpreet ,
× RELATED பாரா பேட்மிண்டன் தொடரில் துளசிமதி...