சென்னை: விசிக பொருளாளர் எஸ்.எஸ்.பாலாஜி வெளியிட்ட அறிக்கை: அம்மோனியா கசிவு விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குனமடைய வேண்டுகிறேன். தொழிற்சாலைகளில் விஷவாயு கசிவு, மற்றும் பாதுகாப்பு குறைபாடு விபத்துகளுக்கு நிறுவனங்களை பொறுப்பாக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை. அதே வேளை இந்நிறுவனங்களின் செயல்பாடுகளை கண்காணித்து முறைப்படுத்த வேண்டிய அரசின் கடமை எந்தளவிற்கு உள்ளது என்பதும் ஆய்விற்குரியது. இந்நிறுவனங்களின் தொடர் கண்காணிப்பிற்கு அரசு என்ன வழிமுறை வைத்துள்ளது?. இந்நிறுவனங்களுக்கான பாதுகாப்பு தணிக்கை தொடர்பாக என்ன வழிமுறைகள் வைத்துள்ளார்கள்?. இத்தகைய நிறுவனங்கள் முறையாக, பாதுகாப்பாக சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படாமல் செயல்படுவதை உறுதிபடுத்த வேண்டிய பெரும் பொறுப்பு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்திற்கு உண்டு.
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில் 141 பொறியாளர்கள், 86 அறிவியல், 97 ஆய்வக பணியாளர்கள், 415 அமைச்சக பணியாளர்கள் என மொத்தம் 1100 பேர் கொண்ட அமைப்பு. இதில் சுமார் 40% பணியிடங்கள் காலியாக உள்ளது என்பது தற்போதைய நிலை. உடனடியாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரிய அமைப்பை விரிவாக்கி வலுவூட்டிட வேண்டும்.ஒவ்வொரு முறையும் இது போன்ற விபத்துகளில் நிறுவனங்கள் மீது வழக்கு, அதிகாரிகள் மீது பழி, பாதிக்கப்பட்ட நபர்கள் அவர்களது குடும்பத்திற்கு இழப்பீடு என தொடர்வது ஏற்புடையதல்ல. பல்லாயிரக்கணக்கான பொறியியல், அறிவியல் பட்டய, பட்டங்கள் பெற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். பாதுகாப்பான சுற்றுச்சூழலை ஏற்படுத்தி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திட வேண்டும். அனைத்து வகையான உள்ளாட்சி அமைப்புகளிலும் திடக்கழிவு மற்றும் திரவக் கழிவை கையாளக்கூடிய பொறுப்பை செய்வதற்கென்று தனியாக துறையொன்றை ஏற்படுத்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
