×

25 வங்கி கணக்குகளை பயன்படுத்தி போலி நிறுவனங்கள் மூலம் ரூ.3,000 கோடி ஜிஎஸ்டி மோசடி: பஞ்சாப் கும்பலை சுற்றிவளைத்த அமலாக்கத்துறை

சண்டிகர்: போலி ரசீதுகள் மூலம் வரி ஏய்ப்பு செய்த ஐந்து பேர் மீது அமலாக்கத்துறை புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பஞ்சாப் மாநிலம் மண்டி கோபிந்த்கர் மற்றும் பதேகர் சாஹிப் பகுதிகளில் கடந்த 2018ம் ஆண்டு முதல் அமித் குமார் கோயல் என்பவர் உள்ளீட்டு வரி சலுகை (ஜிஎஸ்டி) பெறுவதற்காக சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் தனது சகோதரர் மனிஷ் குமார், கவுரவ் அகர்வால், குர்தீப் சிங் மற்றும் பல்வந்த் சிங் ஆகியோருடன் இணைந்து போலி ரசீதுகளை உருவாக்கி வரி ஏய்ப்பு செய்து வந்துள்ளார்.

இவர்கள் 27 போலி நிறுவனங்களை உருவாக்கி, 720.97 கோடி ரூபாய் மதிப்பிலான போலி வர்த்தகம் நடந்ததாக கணக்கு காட்டியுள்ளனர். இதன் மூலம் அரசுக்கு கிடைக்க வேண்டிய 108.49 கோடி ரூபாய் உள்ளீட்டு வரி சலுகையை சட்டவிரோதமாக பெற்றுள்ளனர். எவ்வித சரக்கு பரிமாற்றமும் இல்லாமல் காகித அளவில் மட்டுமே இந்த வர்த்தகம் நடந்துள்ளது அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை உதவி இயக்குனர் சூரஜ் குமார் யாதவ் அளித்த புகாரின் அடிப்படையில், இந்த மெகா மோசடி தொடர்பாக ஐந்து பேர் மீது தற்போது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த கும்பல் 25 வங்கி கணக்குகளை பயன்படுத்தி 3,089.57 கோடி ரூபாய் பணத்தை வங்கிகளில் இருந்து எடுத்து முறைகேடு செய்துள்ளது அம்பலமாகியுள்ளது.

இதற்காக இவர்கள் ஒரே செல்போன் எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளைப் பயன்படுத்தி பல போலி நிறுவனங்களை வியூகம் அமைத்து இயக்கி வந்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் நடத்திய சோதனையில் 54 செக் புத்தகங்கள், 46 ஏடிஎம் கார்டுகள், 11 பான் கார்டுகள், லேப்டாப் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த கும்பலின் தலைவனான அமித் குமார் கோயல், நிறுவனங்களிடம் இருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு தனது கமிஷனை கழித்துவிட்டு ரொக்கமாக திருப்பிக் கொடுத்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இந்த மெகா மோசடி தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags : Enforcement Directorate ,Chandigarh ,Amit Kumar ,Mandi Gobindgarh ,Patekar Sahib ,Punjab ,
× RELATED கடும் கட்டுப்பாடுகளுடன் நீட்...