×

சுடுகாட்டு பாதை இல்லாததால் விளை நிலங்களில் உடலை சுமந்து செல்லும் சோகம்: அரை நூற்றாண்டாக தொடரும் அவலம்

 

* தீர்வு கிடைக்குமா? மக்கள் எதிர்பார்ப்பு

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே சுடுகாட்டிற்குச் செல்ல முறையான சாலை வசதி இல்லாததால், உயிரிழந்த வாலிபரின் உடலை விளைநிலங்கள் வழியாகப் பொதுமக்கள் சுமந்து செல்லும் அவல நிலை அரங்கேறியுள்ளது. இதில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் இந்தத் துயரத்திற்கு அதிகாரிகள் இன்னும் தீர்வு காணவில்லை எனப் பகுதி மக்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், நன்னிலம் அருகேயுள்ள கமுககுடி கிராமத்தைச் சேர்ந்த வினித் என்ற வாலிபர் சமீபத்தில் காலமானார். அவரது உடலை அடக்கம் செய்வதற்காக மயானத்திற்கு எடுத்துச் செல்ல உறவினர்களும் கிராம மக்களும் முயன்றனர்.

ஆனால், அங்கு செல்வதற்கு முறையான பாதை இல்லாததால் இறுதி ஊர்வலம் பெரும் சவாலாக மாறியது. வேறு வழியின்றி, இடுப்பளவு பயிர்கள் வளர்ந்துள்ள விளைநிலங்கள் மற்றும் சேறும், சகதியுமான பாதைகள் வழியாக வினித்தின் உடலை மக்கள் ஆபத்தான முறையில் தோளில் சுமந்து சென்றனர். நெஞ்சை உலுக்கும் இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி, பார்ப்போரை அதிர்ச்சியடையச் செய்துள்ளதுடன் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. தங்கள் கிராமத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மயானத்திற்கு செல்ல முறையான பாதை வசதி இல்லை என்றும், ஒவ்வொரு முறை யாராவது இறந்தாலும்,

அடுத்தவர்களின் விளைநிலங்கள் வழியாகத்தான் உடலை எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது என்றும், மழைக்காலங்களில் நிலைமை இன்னும் மோசமாகிவிடுகிறது என்றும் கமுககுடி கிராம மக்கள் மிகுந்த வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இப்பிரச்சினை குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதல் முதலமைச்சரின் தனிப்பிரிவு வரை பலமுறை மனுக்கள் அளித்தும், இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, இனிமேலும் காலம் தாழ்த்தாமல் கமுககுடி கிராம மக்களின் இந்த அரை நூற்றாண்டு கால அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க, மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் உடனடியாகச் சுடுகாட்டுப் பாதையை அமைத்துத் தர வேண்டும் எனச் சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Thiruvarur ,Nannilam ,Thiruvarur district ,
× RELATED வெள்ளோடு அருகே சாலையோரம் முளைத்திருந்த 2.6 கிலோ எடை கொண்ட அதிசய காளான்