தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்றுவரும் பாலியல் குற்றங்களை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கண்டன பேரணி

தஞ்சாவூர்: தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்றுவரும் பாலியல் குற்றங்களை கண்டித்து பட்டுக்கோட்டையில் இன்று மாலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக கண்டன பேரணி நடந்தது. 1,000க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் உள்பட 1,500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பெண்களுக்கும் பாதுகாப்பில்லை, சிங்கப்பெண் படைக்கும் பாதுகாப்பில்லை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலே உருவாகியிருப்பதாக பெண்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்று இன்றுடன் 41 நாட்கள் ஆகிறது. இந்த 41 நாட்களில் தமிழகத்தில் தொடர்ந்து பாலியல் குற்றங்கள் நடைபெற்ற வண்ணம் இருந்து வருகிறது. பெண்களுக்கு, குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழலையே நிலவி வருவதாக பொதுமக்கள் ஆங்காங்கே போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்றுவரும் பாலியல் குற்றங்களை கண்டித்து தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து கண்டன பேரணி இன்று மாலை நடந்தது. இந்த பேரணியில் 1,000க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 1,500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பேரணி பட்டுக்கோட்டை வடசேரி ரோடு ஆற்றுப்பாலம் பகுதியிலிருந்து புறப்பட்டு பிள்ளையார் கோயில் தெரு, பெரியதெரு வழியாக மணிக்கூண்டு பகுதியில் நிறைவடைந்தது. பேரணியில் கலந்து கொண்டவர்கள் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து விளம்பர பதாகைகளை தங்களது கைகளில் ஏந்தி பெண்களுக்கும் பாதுகாப்பில்லை, சிங்கப்பெண் படைக்கும் பாதுகாப்பில்லை என்பது உள்பட கோஷங்களை எழுப்பியவாறு வந்தனர்.

பின்னர் மணிக்கூண்டு பகுதியில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர். பேரணியில் கலந்து கொண்டவர்கள் கூறுகையில், ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக அரசு பொறுப்பேற்று 41 நாட்களில் தமிழகத்தில் தொடர்ந்து பாலியல் குற்றங்கள் நடைபெற்று வருகின்றன. பெண்களுக்கு ஒரு பாதுகாப்பற்ற சூழலே நிலவி வருகிறது.

பாலியல் குற்றங்கள் நடைபெறுவதற்கு அடிப்படைக் காரணமான போதைப் பொருட்கள் புழக்கமும் அதிகமாகி விட்டது. எனவே பாலியல் வன்கொடுமைகளுக்கு காரணமான குற்றவாளிகளை விரைந்து விசாரித்து அவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு எச்சரித்தனர்.

Related Stories: