×

லஞ்ச ஊழல் வழக்கு போடுவதாக கூறி மிரட்டிய லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்: விஜிலென்ஸ் ஏடிஜிபி அருண் அதிரடி

சென்னை: லஞ்ச ஊழல் வழக்கு போடுவதாக மிரட்டிய லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். டிஎஸ்பி ஒருவர் ஊட்டிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னையைச் சேர்ந்த வருவாய்த்துறை அதிகாரி லஞ்சம் கேட்பதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஒரு அனாமதேய கடிதம் வந்துள்ளது. அந்த கடிதம் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் விமலா விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. அவர் புகாருக்குள்ளான வருவாய்த்துறை அதிகாரியை அழைத்துப் பேசியுள்ளார். உங்கள் மீதான புகாரை முடிக்க வேண்டும் என்றால் பெரிய அளவில் லஞ்சம் வேண்டும் என்று கேட்டுள்ளார்.

ஆனால் லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத வருவாய்த்துறை அதிகாரி இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருணிடம் புகார் செய்துள்ளார். இதுகுறித்து ஐஜி துரைக்குமார், எஸ்பி தேவராணி ஆகியோர் விசாரணை நடத்தும்படி அருண் உத்தரவிட்டார். அவர்கள் விசாரணை நடத்தியதில், இன்ஸ்பெக்டர் விமலா, பணம் கேட்டு மிரட்டியது உறுதிப்படுத்தப்பட்டது. அவர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தனர். இதை ஏற்று, இன்ஸ்பெக்டர் விமலா அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

லஞ்சப் புகாரில் இன்ஸ்பெக்டர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் லஞ்ச ஒழிப்புத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்ததோடு, இன்ஸ்பெக்டருக்கு ஆதரவாக இருந்ததாக டிஎஸ்பி ஜாய் தயாள், ஊட்டிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த இருவர் மீதும் எடுக்கப்பட்ட நடவடிக்கை லஞ்ச ஒழிப்புத்துறையில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Tags : ADGP ,Arun ,Chennai ,Ooty ,Anti-Corruption Department ,
× RELATED நான் முதல்வன் திட்டத்தின் பெயரை...