×

மின்சாரத்துறை அமைச்சரின் சொந்த ஊர் அருகே மின்வசதி இல்லாமல் மக்கள் தவிப்பு

மதுரை: உசிலம்பட்டி அருகே மின் இணைப்புக்காக முதலைக்குளம் கிராம மக்கள் 4 மாதங்களாக காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மின்சாரத்துறை அமைச்சரின் சொந்த கிராமம் அருகே மின்வசதியின்றி கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.

உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஒன்றியத்தில் அமைந்துள்ள முதலைக்குளம் கிராமத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் கட்டப்பட்ட ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை வசதி மற்றும் மின்சார வசதியின்றி கடந்த 4 மாதங்களாக அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் குடும்பங்கள் பல வருடமாக வசித்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து தமிழக அரசிடம் விடுக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் சுமார் 30க்கும் மேற்பட்டோர்க்கு புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. வீடுகள் கட்டப்பட்டு பணிகள் முடிந்தும் இதுவரை தற்காலிகமாக திருமண மண்டபத்தில் தங்கியிருந்த மக்கள் வீடுகள் ஓப்படைக்கப்பட்ட நிலையில் வேறுவழியின்றி மின்சாரவசதி இல்லாமல் குடியேறினர். தேர்தல் நெருங்கியதை கணக்கில் கொண்டு ஒப்பந்த பணி அவசரமாக முடித்துவிட்டு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனால் இரவு நேரங்களில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் மாணவர்கள் கல்வி கற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஆதிதிராவிடர் மக்கள் வறுமை கோட்டிற்கு கீழே வாழ்பவர்கள். மின்சார வசதி இல்லாததால் மாணவர்களின் படிப்பு முற்றிலும் பாதிப்பு அடைகிறது என்று பெற்றோர்கள் வருத்தத்துடன் தெரிவித்து வருகின்றனர். தற்போதைய மின்சாரதுறை அமைச்சர் நிர்மல்குமார் அவர்களின் சொந்த கிராமமான முதலைக்குளம் கிராமத்தில் மின்வசதி இல்லாதது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு சம்மந்தப்பட்ட குடியிருப்புகளுக்கு மின்இணைப்பு வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags : Madurai ,Ahlikulam ,Usilampatty ,Selampatty Union ,
× RELATED சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.7 லட்சம் மோசடி: 3 பேர் மீது வழக்கு