×

பயன்பாடின்றி கிடக்கும் தானிய சேமிப்பு கிடங்கு ரேஷன் கடைக்கு பயன்படுத்த வேண்டுகோள்

 

அந்தியூர், ஜூன் 18: அந்தியூர் அருகே ஒட்டப்பாளையம் ஊராட்சி, செம்புளிச்சாம்பாளையத்தில் வாடகை கட்டடத்தில் ரேஷன் கடை இயங்கி வருகிறது. இக்கடையிலிருந்து செம்புளிச்சாம்பாளையம், குந்துபாயூர், மேல்தெரு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் 600க்கும் மேற்பட்ட பயனாளிகள் ரேஷன் பொருட்களை வாங்கி செல்கின்றனர். இங்கு வாடகை கட்டடத்தில் இடப்பற்றாக்குறை நிலவுவதால், புதிய ரேஷன் கடை கட்டித்தர கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், கடந்த 2024ல், செம்புளிச்சாம்பாளையத்திலிருந்து ஒலகடம் செல்லும் வழியில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சத்து 59 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய தானிய சேமிப்பு கிடங்கு கட்டிடம் கட்டப்பட்டது.

முன்னாள் முதல்வர் ஸ்டாலின் இக்கடையை காணொலி வாயிலாக திறந்து வைத்தார். மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து ஒன்றரை ஆண்டுகளாகியும், வாடகை கட்டடத்திலேயே இன்னும் ரேஷன் கடை இயங்கி வருகிறது. சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்க அலுவலர்களும், இக்கடையை தானிய சேமிப்பு கிடங்கு கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சியில் ஈடுபடவில்லை. எனவே, ரேஷன் கடையை மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Anthiyur ,Sembulichampalayam, Ottapalayam panchayat ,Sembulichampalayam ,Kunthubayur ,Meltheru ,
× RELATED கஞ்சா விற்ற 2 பேர் மீது குண்டாஸ்